ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்து வரும் போர் நிலை உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் வேளையில், இந்தியா தனது எரிபொருள், உரம் மற்றும் அந்நியச் செலாவணி ஆகிய முக்கிய '3Fs' காரணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார். சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) தனது 37-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை மற்றும் சவால்களை விரிவாக விளக்கினார்.
குறிப்பாக, உலக அளவில் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதன் நேரடி எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் விலை கடந்த 11 நாட்களில் மட்டும் லிட்டருக்கு ₹7.38 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நான்காவது முறையாக விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 முதல் 90 சதவீதத்தை இறக்குமதியை நம்பியிருப்பதால், சர்வதேச விலை ஏற்றம் நேரடியாக உள்நாட்டு சந்தையை பாதிக்கிறது.
இந்தச் சூழலில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அண்மையில் 97 ரூபாய் வரை சரிந்து, பின்னர் ஓரளவு மீண்டுள்ளது. இத்தகைய நெருக்கடியைச் சமாளிக்க பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் விடுத்த வேண்டுகோளை நிதியமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். “அடுத்த ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும், அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களை ஒத்திவைக்கவும், தேவையற்ற இறக்குமதிகளைக் குறைக்கவும்” என்ற அவரது அறிவுறுத்தலை அவர் நினைவு கூர்ந்தார்.
இதையும் படிங்க: பத்ம விருதுகள் வழங்கும் விழா 2026..!! 66 பேரை கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!!

போர் வெறும் அரசியல் மோதலாக மட்டும் இல்லாமல், சாதாரண வணிக நடவடிக்கைகளையும் பாதிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கப்பல் போக்குவரத்து தாமதம், சரக்குக் கட்டண உயர்வு, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் ஏற்றுமதி ஆர்டர்களில் நிச்சயமற்ற தன்மை ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது என்றார். எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு கலால் வரியைக் குறைத்துள்ளது. இதனால் அரசுக்கு ₹1 லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ₹8.1 லட்சம் கோடி நிலுவைத் தொகையை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் 45 நாட்களுக்குள் விரைந்து செட்டில் செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.சிலர் இந்தியப் பொருளாதாரம் முழுமையாகச் சரிந்துவிட்டது போன்ற அவநம்பிக்கையான பிம்பத்தை திட்டமிட்டு பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர், உள்நாட்டுப் பொருளாதாரம் இன்னும் வலுவாகவும், நெகிழ்வுத் தன்மையுடனும் உள்ளது என்று உறுதிப்படுத்தினார்.
GST வரி வசூல் தொடர்ந்து உயர்வு, உள்நாட்டுத் தேவை நிலைத்தன்மை ஆகியவற்றை இதற்குச் சான்றாக அவர் முன்வைத்தார். உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்க உள்நாட்டு வலிமையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த உரை வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: நெருங்கும் பக்ரீத் பண்டிகை..!! சுட சுட பிரியாணிக்காக.. புளியந்தோப்பில் ஆடுகள் விற்பனை அமோகம்..!!