இந்தியாவில் செயல்படும் சமூக வலைதள நிறுவனங்கள் அமெரிக்க சட்டங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்பட முடியாது என்றும், இந்திய சட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வீடியோ நீக்கப்பட்டது, குழந்தைகள் தொடர்பான பாலியல் உள்ளடக்கங்கள் மற்றும் போலி வீடியோக்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் தளங்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்களில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் கொள்கை விவகாரங்களுக்கான சர்வதேச அதிகாரி ஜோயல் கப்லான் தலைமையிலான குழுவினர் இந்திய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் கிருஷ்ணன் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்த மெட்டா குழுவினர், இன்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் சந்தித்தனர்.
இதையும் படிங்க: குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியம்? மெட்டாவுக்கு ரூ.5,404 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த சந்திப்புகளில் இந்தியாவில் மெட்டா தளங்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப மற்றும் கொள்கை சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மெட்டா குழுவினர் இன்னும் சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து மேலும் 3 அல்லது 4 சுற்று ஆலோசனைகளில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, வாட்ஸ்ஆப் தொடர்பான விவகாரங்களும் அடுத்தகட்ட சந்திப்புகளில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மெட்டா நிறுவனத்தின் அனைத்து தளங்களும் இந்திய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் செயல்படும் சமூக வலைதளங்கள் அமெரிக்க சட்டங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்க முடியாது என மத்திய அரசு தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களுக்கு இந்திய சட்டங்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பொறுப்புகள் இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மெட்டா மட்டுமின்றி எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதள நிறுவனங்களுடனும் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் செயல்படும் உலகளாவிய சமூக வலைதள நிறுவனங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான ஒழுங்குமுறை தொடர்பான விவாதம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பு, போலி உள்ளடக்கங்கள், பயனர் பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ பொறுப்புகள் போன்ற விவகாரங்களில் இனி கடுமையான கண்காணிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்! மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!