சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பிரம்மாண்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் வரையிலான புதிய வழித்தடத்தில் வரும் நவம்பர் மாதத்தில் சோதனை ரயில் ஓட்டத்தை (Trial Run) முறைப்படி தொடங்கச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) திட்டமிட்டுள்ளது.
சென்னையின் மூன்று முக்கிய வழித்தடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதில் குறிப்பாக, ஐந்தாவது வழித்தடத்தின் (Corridor 5) ஒரு முக்கியப் பகுதியாக அமையக்கூடிய கோயம்பேடு மற்றும் நந்தம்பாக்கம் இடையிலான உயர்மட்டப் பாதைகள், தண்டவாளங்கள் அமைத்தல் மற்றும் சிக்னல் உள்கட்டமைப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பயணிகள் சேவையை முன்கூட்டியே தொடங்குவதற்கு ஏதுவாக, இந்த வழித்தடத்தை முன்னுரிமை அடிப்படையில் தயார் செய்யும் பணிகளில் பொறியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தண்டவாளங்களின் உறுதித்தன்மை, மின்சார விநியோகம், சிக்னலிங் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக ஆய்வு செய்யும் வகையில், வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்த வழித்தடத்தில் முதல்முறையாகப் பரிசோதனை ரயில் இயக்கத்தை முன்னெடுக்க அதிகாரிகள் அட்டவணை தயாரித்துள்ளனர். இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் (CMRS) விரிவான கள ஆய்வுக்குப் பிறகு விரைவில் பொதுமக்களின் தினசரிப் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!
தலைநகரின் முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமான கோயம்பேடுடன், நந்தம்பாக்கம் வர்த்தக மையப் பகுதியை இணைக்கும் இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் போரூர்-ஆலந்தூர் இணைப்புகளில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்பதால், புறநகர் மற்றும் தென்சென்னை பகுதி பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: நீதிமன்றங்கள் வழங்குவது நீதியா தீர்ப்பா?: அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டில் தமிமுன் அன்சாரி!