இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி 2025-26 நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இது நாட்டின் தற்சார்பு இலக்கை நோக்கிய முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் வெளிநாடுகளை முழுமையாகச் சார்ந்திருந்த இந்தியா, தற்போது உள்நாட்டிலேயே ஆயுதங்கள், போர் விமானங்கள், கப்பல்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்து, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நிலைக்கு முன்னேறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த சில ஆண்டுகளாக இத்துறையில் வேகமான வளர்ச்சி காணப்படுகிறது.
ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. 2025-26 நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடி என்ற வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி அட்வைஸ்! தவறாமல் கடைபிடிக்கும் அமைச்சர்கள்! ஷேரிங் முறையில் கார் பயணம்!
முந்தைய 2024-25 நிதியாண்டில் ரூ.1.54 லட்சம் கோடியாக இருந்த உற்பத்தி இப்போது 15.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2020-21ல் ரூ.84,643 கோடியாக இருந்தது இப்போது 110 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 2013-14ல் ரூ.43,746 கோடியாக இருந்த உற்பத்தி தற்போது கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சிக்கு பாதுகாப்புத் துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களின் கூட்டு முயற்சியே காரணம் என ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். “வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி மேலும் வேகம் பெறும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் ஒரு அங்கமாக பாதுகாப்புத் துறை உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார வலிமை அதிகரிப்பு ஆகியவை சாத்தியமாகியுள்ளன. இந்தியா தற்போது உலக அளவில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.
இதையும் படிங்க: முப்படை தலைமை தளபதியாக தமிழர் ராஜா சுப்பிரமணியன் பதவியேற்பு!! இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதி!