ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி, தொழிலதிபரிடம் இருந்து சுமார் ரூ.40 லட்சம் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில், மவுண்ட் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த முகமது புகாரி மற்றும் அவரது கூட்டாளி சீனிவாசன் ஆகியோரை எலிபண்ட் கேட் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, இன்று காலை மவுண்ட் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த முகமது புகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அகில்குமார் என்பவர், இன்று காலை சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தாம் தங்க வியாபாரம் மற்றும் பங்குச் சந்தை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த ஒரு ஆண்டாக பொய் வழக்கில் சிக்கவைத்துவிடுவதாக மிரட்டி முகமது புகாரி ரூ.35 லட்சம் பெற்றதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!
மேலும், மீதமுள்ள ரூ.5 லட்சத்தையும் தர வேண்டும் என்று கூறி, நேற்று தனது வீட்டிற்கு வந்த முகமது புகாரி, தன்னை மிரட்டி தாக்கியதாகவும், வீட்டிலிருந்த கட்டிலில் படுத்து உணவு வாங்கி வரச் சொல்லி இரவு உணவு அருந்திய பிறகு, ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்னர், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தம்மை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்லி, அங்கு இறங்கிய பிறகு, முகமது புகாரியும் அவருடன் வந்த இருவரும் சிவப்பு நிற ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரில் அங்கிருந்து சென்றதாகவும் அகில்குமார் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மாநகர காவல் ஆணையர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில், புகாரில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, இது மிகவும் முக்கியமான குற்றச்சாட்டாக கருதப்பட்டதால், முகமது புகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையை பூக்கடை காவல் துணை ஆணையர் கோபி மேற்கொண்டார். விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதியானதைத் தொடர்ந்து, மவுண்ட் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த முகமது புகாரி கைது செய்யப்பட்டார்.
இவருடன், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசனும் கைது செய்யப்பட்டார். இவர் 'பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' அமைப்பில் இருந்தவர் என்றும், முகமது புகாரியின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு, பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சீனிவாசன் மூலமாகவே கடந்த ஒரு ஆண்டாக பணம் பெறப்பட்டதாகவும், நேற்று ரூ.5 லட்சத்தையும் அவரின் உதவியுடன் பெற்றுக்கொண்டு, அதன் பின்னர் காவல் நிலையத்திற்கு திரும்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், மவுண்ட் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) கண்ணனின் சிவப்பு நிற ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார் (பதிவு எண்: TN 85 P 4527) பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அந்த காரில் எஸ்.ஐ. கண்ணன் மற்றும் முகமது புகாரி ஆகியோர் அகில்குமார் வீட்டிற்கு சென்று, சோதனை நடத்துவதாகக் கூறி வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
அப்போது எந்தவிதமான போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், அகில்குமார் வைத்திருந்த ஒரு பொருளை காட்டி, "உன்னை இந்த வழக்கில் சிக்கவைத்து கைது செய்துவிடுவேன்" என்று மிரட்டி, ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு மீண்டும் காவல் நிலையத்திற்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
மேலும், உயரதிகாரியின் பெயரை பயன்படுத்தி தாம் வந்ததாகக் கூறி, அகில்குமாரை மிரட்டி தாக்கியதுடன், அவரது வீட்டை சோதனை என்ற பெயரில் சேதப்படுத்தி, குடும்பத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், முகமது புகாரி மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்ட சீனிவாசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிற ஃபோர்டு ஈகோஸ்போர்ட் கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க: பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!