டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று சூசகமாகக் கூறிய நிலையில், ஈரான் தரப்பில் இருந்து கடுமையான பதில் வந்துள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போர் நிறுத்தத்தை வெளிப்படையாக நிராகரித்துவிட்டார். அதேநேரத்தில், ஈரானுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல் மீண்டும் நடைபெறாத வகையில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த 28-ம் தேதி அணுசக்தி அச்சுறுத்தல் என்ற காரணத்தைக் காட்டி ஈரான் மீது போரைத் தொடங்கின. இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள், எரிவாயு நிலையங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: 4,000 கி.மீ தாண்டி தாக்குதல்! அமெரிக்காவுக்கு ஈரான் அதிர்ச்சி வைத்தியம்! டியாகோ கார்சியா கடற்படை தளம் நொறுங்கியது!

இந்நிலையில், டிரம்ப் “நமது இலக்குகள் நெருங்கிவிட்டன. ராணுவ நடவடிக்கைகளை முடித்துக்கொள்ளலாம். பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உள்ளது” என்று கூறியிருந்தார். ஆனால் ஈரான் இந்தக் கருத்தை ஏற்க மறுத்துள்ளது.
அப்பாஸ் அராக்சி கூறுகையில், “போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உத்தரவாதங்கள் மற்றும் இழப்பீடுகளுடன் போர் நிரந்தரமாக முடிவடையும் வரை ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ளும். கடந்த ஆண்டு நிலைமை மீண்டும் ஏற்பட எங்களுக்கு விருப்பமில்லை.
அமெரிக்கா இன்னும் தனது ஆக்கிரமிப்பை நிறுத்தத் தயாராக இல்லை. எனவே நாங்கள் தொடர்ந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். இழப்பீடு மற்றும் உத்தரவாதம் இல்லாமல் எந்தப் போர் நிறுத்தத்தையும் ஏற்க மாட்டோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஈரான் தரப்பின் இந்த உறுதியான நிலைப்பாடு, மத்திய கிழக்குப் போரை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடல், எரிபொருள் விலை உயர்வு, உலகப் பொருளாதாரப் பாதிப்பு உள்ளிட்டவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரு தரப்பும் இறங்கி வராதது உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: கார்க் தீவை தாக்கினால் சாம்பலாக்கிருவோம்!! அமெரிக்காவுக்கு ஈரான் பகீரங்க மிரட்டல்!