பஹல்காம் தாக்குதல் பாதுகாப்பு தோல்வி, உளவு துறை குறைபாடு என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானர் சுற்றுலா பயணிகள் ஆவர். இந்தச் சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையின் தோல்வி என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மா நாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா கூறுகையில், "பஹல்காம் தாக்குதல் பாதுகாப்புத் தோல்வி, உளவுத்துறை குறைபாடு விஷயம் என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஜம்மு காஷ்மீரை சீர்குலைக்கும் பாகிஸ்தானின் முயற்சி. எங்கள் வாழ்க்கை சிறப்பாக செல்வதை அவர்கள் (பாகிஸ்தான்) விரும்பியிருக்க மாட்டார்கள். எங்கள் மக்களுக்கிடையில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. அதனால், அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால், அது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை எவ்வாறு பாதிக்கும் என்கிற உண்மையை அவர்கள் யோசித்துப் பார்க்கவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளாக அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்ற, மசூதிகளை எரிக்க கதைகள் நடந்து வருகின்றன. நாங்கள் ஏற்கனவே அதையெல்லாம் எதிர்கொண்டுதான் வருகிறோம். தற்போது பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் ஆசிம் முனிர் இரண்டு நாடு கொள்கையைப் பேசித் தூண்டிவிடுகிறார். ஒருவேளை போர் வந்தால் என்ன நடக்கும் என்று அல்லாவுக்கு மட்டுமே தெரியும்.

நாளை என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. ஆனால், இன்று இரண்டு நாடுகளும் சண்டைக்குத் தயாராகி வருகின்றன. அவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களையும் பிடிக்க ஒரு தீர்வு காண வேண்டும். ஆனால், மக்களை வெளியேற்றுவது சரியான செயல் இல்லை. அது மனிதாபிமானத்துக்கு எதிரானது. சிலர் இங்கே 75 வருடங்களாக இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் 25 வருடங்களாக இங்கே இருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக இருந்ததில்லை. மாறாக அவர்கள் தங்களை இந்தியாவுக்காக அர்ப்பணித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய ராணுவம் தாக்குதல் பீதி.. இந்தியாவிலிருந்து தெறித்து ஓடும் பாகிஸ்தானியர்கள்!
இதையும் படிங்க: மருத்துவமனையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. ரகசிய சிகிச்சை என தகவல்?