தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். தமிழ்நாடு - கர்நாடகா இடையே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரம் உச்சக்கட்டத்தில் உள்ளது. கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாதுவில் அணையைக் கட்டியே தீருவேன் என அதற்கான அனுமதிகளைப் பெற டெல்லியில் முகாமிட்டுள்ள நேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் கர்நாடகா விசிட் அனைத்து தரப்பிலும் உற்று நோக்கப்பட்டது.
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் தமிழக விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் காவிரி தண்ணீர் திறப்பு குறித்து முதலமைச்சர் விஜய், கர்நாடகாவில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மற்றொருபுறம் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள், ஒரு ராஜ்யசபா சீட்டை வாரிக்கொடுத்த விஜய்க்கு கர்நாடகா அரசு என்ன மாதிரியான வரவேற்பை கொடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
ஆனால் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவை பார்த்து தவெகவினர் கொதித்து போயுள்ளனர். அந்த வீடியோவில் கர்நாடகா அமைச்சர் யுடி காதர், விஜய்யை அவமதித்ததாக சர்ச்சை கிளம்பி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 3 நாள் டெல்லி சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதையும் படிங்க: ஆட்டிறைச்சி கேட்டவர்களுக்கு மாட்டிறைச்சி பரிமாறிய உணவகம்!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! பாயந்தது நடவடிக்கை!
இதற்காக விஜய் டெல்லியில் இருந்து விமானத்தில் கர்நாடகாவின் தட்சின கன்னடா மாவட்டம் மங்களூரில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தார். மங்களூர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவும், கர்நாடகாவின் சுகாதார துறை அமைச்சருமான யுடி காதர், விஜய்யை வரவேற்றார். விஜய் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது யுடி காதர் அவருக்கு கைக்கொடுத்து வரவேற்றார். ஆனால் பூங்கொத்து, ரோஜா மலர், புத்தகம் என்று எதையும் கொடுக்கவில்லை. அவர் அருகே நின்றவர்கள் தான் விவேகானந்தர் புத்தகம் உள்பட சில புத்தகம் மற்றும் பூங்கொத்துகளை கொடுத்து விஜய்யை வரவேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு பூங்கொத்து கூட வரவேற்காத யு.டி.காதர், அடுத்ததாக அவர் அளித்த பேட்டியில் விஜயின் பெயரை மாற்றிச் சொன்னது பெரும் சர்ச்சையக் கிளப்பியுள்ளது. என்னுடைய மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள தமிழ்நாடு முதல்வரான மரியாதைக்குரிய விஜயகுமாரை மக்கள் சார்பில் வரவேற்றேன். அவர் அனைவருக்கும் பிடித்தமான நபராக உள்ளார். நட்புடன் இருக்கிறார். கடலோர கர்நாடகா மக்கள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்'' என்றார். இந்த பேட்டியில் யுடி காதர், முதல்வர் விஜய்யை விஜய் எனறோ அல்லது ஜோசப் விஜய் என்றோ கூறியிருக்கலாம். ஆனால் அவர் விஜய குமார் என்று தவறாக கூறியுள்ளார்.
பூங்கொத்து கொடுத்து வரவேற்காதது மற்றும் பெயரை தவறாக கூறியது என 2 சம்பவங்களால் யுடி காதர், விஜய்யை அவமானப்படுத்தினாரோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். காங்கிரஸை கூட்டணியில் சேர்த்தது மட்டுமின்றி 2 அமைச்சர் பதவியையும் கொடுத்து அழகு பார்த்த விஜய்க்கு கர்நாடகா காங்கிரஸ் இப்படி தான் மரியாதை செய்யுமா? என தவெகவினர் சோசியல் மீடியாவில் எரிமலையாய் வெடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சித்தராமையா Out..! முதல்வராகிறார் டி. கே. சிவக்குமார்..!! கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்..!