கேரளாவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது, சாப்பாடு வெந்து கொண்டிருந்த பிரஷர் குக்கருக்குள் கஞ்சாவை மறைத்து போலீசாரை ஏமாற்ற முயன்ற நபர், குக்கர் விசிலில் வெளியேறிய வாசனையால் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் அருகே உள்ள அடுப்புட்டி பகுதியைச் சேர்ந்த பினீஷ் (40) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குன்னங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்த சென்றனர்.
போலீசார் வீட்டை நோக்கி வருவதை முன்கூட்டியே கவனித்த பினீஷ், தன்னிடம் இருந்த கஞ்சாவை உடனடியாக மறைக்க திட்டமிட்டார். அதன்படி, பிளாஸ்டிக் கவரில் இருந்த கஞ்சாவை சாப்பாடு வெந்து கொண்டிருந்த பிரஷர் குக்கருக்குள் வைத்து, எந்த சந்தேகமும் வராத வகையில் அடுப்பில் தொடர்ந்து வேகவிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஹாஸ்பிட்டல் கழிப்பறையில் குழந்தை பெற்ற இளம்பெண்! ஜன்னல் வழியே தூக்கி எறிந்த கொடூரம்! கேரளாவில் அதிர்ச்சி!

வீட்டுக்குள் நுழைந்த போலீசார் அறைகள் முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர். ஆனால் ஆரம்பத்தில் எந்தவித போதைப்பொருளும் கிடைக்கவில்லை. இதனால் சோதனை முடிவுக்கு வருவதாக இருந்த நிலையில், அடுப்பில் இருந்த பிரஷர் குக்கர் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டிருந்தது.
அப்போது குக்கர் விசிலில் இருந்து வெளியேறிய விசித்திரமான வாசனை அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. அருகில் சென்று பரிசோதித்த போலீசார், அது கஞ்சா வாசனையாக இருக்கலாம் என சந்தேகித்தனர். உடனடியாக குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி திறந்து பார்த்தபோது, வெந்த உணவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய சோதனையில் மொத்தம் 401 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பினீஷ் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் ஏற்கனவே கஞ்சா கடத்தல் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், மேலும் சில குற்ற வழக்குகள் அவர்மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
போலீசாரை ஏமாற்றுவதற்காக சமைக்கும் குக்கரையே மறைவிடமாக பயன்படுத்திய திட்டம், இறுதியில் குக்கர் விசிலில் வெளியேறிய வாசனையால் தோல்வியடைந்த சம்பவம் கேரளாவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! மகளால் வந்த வினை!! 12 இடங்களில் சல்லடை!