கேரளாவின் திருவனந்தபுரத்தில் அதானி நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர்கள் சர்பானந்த சோனாவால், சுரேஷ் கோபி, காங்கிரஸ் எம்பி சசி தரூர், கலந்து கொண்டனர். சர்வதேச கப்பல் வழித்தடத்துக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள விழிஞ்சம் துறைமுகத்தில், மிகப் பெரிய சரக்கு கப்பல்களை கையாள முடியும் என்பதால், கப்பல் போக்குவரத்து மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் பெருமளவு உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகம் என்ற பெருமைக்குரிய விழிஞ்சம் துறைமுகம் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதனால் குறைந்த நேரத்தில் அதிக சரக்குகளை கையாள முடியும். 8,900 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த துறைமுகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதானி குழும தலைவர் கவுதம் அதானி பங்கேற்று, பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கினார்.
இதையும் படிங்க: பல பேருக்கு இன்று தூக்கம் போயிருக்கும்..! விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் பேச்சு..!

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: விழிஞ்சம் துறைமுகம் கேரள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் துணை நிற்கும். ஒரு காலத்தில் இந்தியா கடல் வாணிபத்தில் தலைசிறந்து விளங்கியது. உலக அளவில் தலைசிறந்த துறைமுக நகரங்கள் இங்கு செயல்பட்டன. அதில் கேரளாவுக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஜி 20 மாநாட்டின்போது, இந்தியா - மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடையே வர்த்தக வழித்தடம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்மூலம் இந்திய கடல்வழி வாணிபத்துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடையும். இதனால் கேரளாவின் பொருளாதார முன்னேற்றம் வேகமாக இருக்கும். ஒரு பக்கம் பரந்து விரிந்த கடல், மற்றொரு புறம் இயற்கையின் பேரழகு என கேரளாவின் விழிஞ்சம் துறைமுகம் பலவகை வாய்ப்புகளை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சரக்குகளை ஏற்றி வந்த மிகப்பெரிய கப்பல்கள் இதுவரை வெளிநாட்டு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து சரக்குகள் கொண்டு வரப்பட்டன.

விழிஞ்சம் துறைமுகத்தால் அந்த நிலை மாறும். இந்தியாவுக்கான கடல் வழி வாணிப வருவாய் மூன்று மடங்கு அதிகரிக்கும். இனி வெளிநாடுகளை நம்பி இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இது வளர்ச்சியின் புதிய ஆரம்பம். கொல்லம் பை பாஸ், ஆலப்புழா பை பாஸ் போன்ற திட்டங்களுடன் கேரளாவுக்கு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுவதால், கேரளாவின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் துறைமுகங்கள், துறைமுக நகரங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வந்துள்ளது. அது தொடரும்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இண்டி கூட்டணியின் முக்கிய துாண்களில் ஒருவர். அதே சமயம், காங்கிரஸ் எம்பி சசி தரூரும் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார். இருவரும் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்றது பலரது துாக்கத்தை கெடுத்துவிடும் என நினைக்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.
விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில், பிரதமர் மோடியின் அரசியல் கலந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அச்சா... அம்மே...இருட்டில் அலறிய சிறுமி! சட்டென ஓடிய காம மிருகங்கள்.