மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 5-ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்தப் பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விழா காலத்தில் நத்தம், மேலூர், வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மதுரை மாநகரப் பகுதிகளிலிருந்தும் கூடுதலாக 125 சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பேருந்துகள் தனி வழித்தடங்களில் இயக்கப்படும் என்பதால், பக்தர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் கோயில் பகுதிகளுக்கு வந்து செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏற்பாடு மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என மாவட்ட நிர்வாகம் நம்புகிறது. மேலும், சித்திரை திருவிழாவின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கிய விழா இடங்கள், பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகள், தேரோட்டப் பாதைகள் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு உள்ளிட்ட இடங்களில் பலத்த காவல் படையினர் குவிக்கப்படுவார்கள். சிசிடிவி கேமராக்கள், தனிப்படை அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டங்கள் மூலம் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: களைகட்டிய சித்திரை திருவிழா..! குலுங்கும் மதுரை... அழகர் உடை தயாரிக்கும் பணி தீவிரம்..!
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்து, காவல்துறை, கோயில் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் பங்கேற்று, பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக விவாதித்தனர். இந்த சித்திரை திருவிழா மதுரையின் பாரம்பரியத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில், பக்தி உணர்வுடன் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெற வேண்டும் என்பதில் மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது. பக்தர்கள் விழா காலத்தில் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடித்து, பாதுகாப்புடன் தரிசனம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஏற்பாடுகள் அனைத்தும் மதுரை சித்திரை திருவிழாவை இன்னும் சிறப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கள்ளழகர் திருமேனிக்கு ஆபத்து? நவீன பம்புகளை பறிமுதல் செய்ய பக்தர்கள் வலியுறுத்தல்!