இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிதாக தொடங்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்பு (MAB) தொகையை நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் ரூ.10,000 இலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் புதிய கணக்கு தொடங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வங்கி அறிவித்துள்ளது.

இந்த உயர்வு, இந்தியாவின் உள்நாட்டு வங்கிகளில் மிக உயர்ந்த MAB தேவையாக கருதப்படுகிறது. அரை-நகர்ப்புற கிளைகளில் குறைந்தபட்ச இருப்பு ரூ.5,000 இலிருந்து ரூ.25,000 ஆகவும், கிராமப்புற கிளைகளில் ரூ.2,500 இலிருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வங்கியின் பிரீமியம் வாடிக்கையாளர் தளத்தை விரிவாக்குவதற்காகவும், உயர் மதிப்புள்ள வாடிக்கையாளர்களை குறிவைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: புதிய கணக்கு தொடங்குபவர்களின் கவனத்திற்கு.. ICICI கொண்டு வந்த புது ரூல்..!!
குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்கத் தவறினால், வாடிக்கையாளர்கள் 6% பற்றாக்குறை அல்லது ரூ.500, இவற்றில் எது குறைவோ அதற்கு ஈடான அபராதம் விதிக்கப்படும். மேலும், வங்கி பணப் பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்களையும் மாற்றியமைத்துள்ளது. மாதத்திற்கு மூன்று இலவச பண வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல் பரிவர்த்தனைகளுக்கு பிறகு, ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கு ரூ.150 வசூலிக்கப்படும். மாதாந்திர இலவச வரம்பு ரூ.1 லட்சத்தை தாண்டினால், ரூ.1,000 க்கு ரூ.3.5 அல்லது ரூ.150, இவற்றில் எது அதிகமோ அது வசூலிக்கப்படும்.
இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் இந்த முடிவு குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார். குறைந்தபட்ச இருப்பு தொகையை தீர்மானிப்பது தனிப்பட்ட வங்கிகளின் முடிவு என்றும், இது ஆர்பிஐயின் ஒழுங்குமுறை விதிகளின் கீழ் வராது என்றும் தெளிவுபடுத்தினார். "ஒவ்வொரு வங்கியும் தங்கள் குறைந்தபட்ச இருப்புத் தேவைகளை தாங்களே நிர்ணயிக்கின்றன. இது ஒழுங்குமுறை எல்லைக்கு உட்பட்டது அல்ல," என அவர் கூறினார்.

இந்த உயர்வு, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வங்கி சேவைகளை அணுகுவதை கடினமாக்கும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். சமூக வலைதளங்களில், இது "பொதுமக்களை கொள்ளையடிக்கும்" முடிவு என்றும், குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் கருத்துகள் பதிவாகியுள்ளன. மறுபுறம், பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு தேவைகளை நீக்கி, நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கின்றன. ஐசிஐசிஐ வங்கியின் இந்த நடவடிக்கை, உயர்ந்த வருமானம் உள்ள வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியாகவும், குறைந்த செலவு வைப்பு நிதிகளை பெறுவதற்கான உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம், நாட்டின் பெருகி வரும் வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் நிதி சேவைகளுக்கான போட்டியை பிரதிபலிக்கிறது. இருப்பினும், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மற்றும் அடிப்படை சேமிப்பு கணக்குகளுக்கு இந்த உயர்வு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING: மதுரை மாநகராட்சியில் 150 கோடி முறைகேடு! உதவி ஆணையர் அதிரடி கைது...