சென்னை ஆழ்வார்பேட்டையில் ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்குச் சொந்தமானது எனத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனம் சார்பில் துபாயிலிருந்து லேண்ட் க்ரூசர் கார் ஒன்று ஆர்டர் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த காரை இறக்குமதி செய்து தருவதற்காக வழக்கமாக இறக்குமதி செய்து தரக்கூடிய இடைத்தரகரான அனுப் ஸ்மித் பெர்னாண்டஸை ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனம் சார்பில் அணுகியுள்ளனர்.
இதற்காக அவரிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் அளவிற்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் அந்த கார் வரவில்லை என்றும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனம் சார்பில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!
இதையடுத்து, தேனாம்பேட்டை போலீசார் இது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். மும்பையில் வசித்து வரும் அனுப் ஸ்மித் பெர்னாண்டஸை போலீசார் பிடித்து, தற்போது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே தான் அந்த காரை துபாயிலிருந்து இறக்குமதி செய்ததாகவும், அப்போது அந்த காரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அந்த காரை இறக்குமதி செய்வதற்கு சுமார் ரூ.60 லட்சம் வரை வரி செலுத்த வேண்டும் என சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த வரியை செலுத்தாததால் அந்த கார் சிறைபிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதனால், இந்த விவகாரத்தில் தனக்கும் தொடர்பில்லை என்று அவர் கூறியிருந்தாலும், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் கூறுவது உண்மைதானா அல்லது போலீசாரிடம் ஏதேனும் தவறான தகவலைத் தெரிவிக்கிறாரா, இந்த மோசடி எப்படி அரங்கேறியது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முழுமையான விசாரணை நிறைவடைந்த பின்னரே, அவர் எவ்வளவு கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார், இதேபோன்று வேறு பலரிடமும் அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்த தகவல்கள் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உதயநிதியின் ஆபாச பேச்சு..! EPS மகன் மிதுனே காரணம்..! அமைச்சர் ஆதவ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!