தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) சமீபத்தில் அமைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கருமேனி ஆற்றுப்பாலம் அருகேயும் திருச்செந்தூர் சாலை விலக்கு அருகேயும் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பெயர் பலகைகள் நிறுவப்பட்டிருந்தன. வழக்கமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டிய இந்தப் பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களின் பெயர்கள் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் பெரிய அளவில் எழுதப்பட்டிருந்தன.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாட்டின் நீண்டகால இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்தச் செயல்பாடு அரசியல் தலைவர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கண்டனங்களைப் பெற்றது.இந்தச் சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்தவுடன் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளில் இந்தப் பெயர்ப் பலகை வைக்கப்பட்டதில் குளறுபடிகள் நடந்ததாகத் துறை ரீதியான விசாரணை தெரிவித்தது.

குறிப்பிட்ட அதிகாரிகளின் கவனக்குறைவும் அலட்சியமும் காரணமாகத் தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு முரணாக மும்மொழியில் பலகை அமைக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து உதவிப் பொறியாளர் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர் ஆகிய இருவரும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதே நேரத்தில் மூன்று மொழிகளில் இருந்த அந்தப் பலகை அகற்றப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்பட்ட புதிய பலகை அதே இடத்தில் பொருத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான மேல் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசின் கவனத்திற்கு வந்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே இந்த நடவடிக்கைகள் முடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்னைக்கே தலைவர் சொன்னாலும் செய்வேன்.. அமைச்சர் பதவியை விட மக்கள் பணியே முக்கியம்..!! வன்னி அரசு உறுதி!!
இந்தப் பின்னணியில் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது அறிக்கையில் தெளிவான நிலைப்பாட்டை வெளியிட்டார். பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டுவந்த இருமொழிக் கொள்கைதான் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் உயிர்க் கொள்கை; நிரந்தரக் கொள்கை என்று அவர் வலியுறுத்தினார். இன்றும் என்றும் என்றென்றைக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இதில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கவே எடுக்காது என்றும் அவர் தெரிவித்தார். மும்மொழிக் கொள்கை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை முறியடிப்போம்., இருமொழிக் கொள்கையை என்றென்றும் உயர்த்திப் பிடிப்போம் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: "கேடுகெட்டத்தனம்"..! நாவை அடக்கணும்..! அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய அதிமுக..!