போளூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அதிகாரப்பூர்வ உதவிகளை விட அடுத்தடுத்த குளறுபடிகளாலேயே 'ஹைலைட்' ஆகியிருக்கிறது.
விழா தொடங்குவதற்கு முன்பே, செய்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலிகளில் தவெக மாவட்ட நிர்வாகிகள் ஆக்கிரமித்து அமர்ந்து கொண்டனர். "நாங்க விஐபிங்க... நீங்க வேணும்னா கீழே உட்காருங்க" என செய்தியாளர்களிடம் அவர்கள் வம்பிலுக்க, கொதித்தெழுந்த பத்திரிகையாளர்கள் தரையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பதறிப்போன அமைச்சர் ஆனந்தும், எம்எல்ஏ அபிஷேக்கும் ஓடிவந்து சமாதானம் பேசி, நிர்வாகிகளை அப்புறப்படுத்திய பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.
விழா மேடையில் நடப்பவற்றைச் செய்தி சேகரிக்க முயன்ற பத்திரிகையாளர்களை, அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களின் தனிப்பட்ட சமூக வலைதள போட்டோகிராபர்கள் மற்றும் கேமராமேன்கள் தொடர்ந்து தடுத்து மறைத்துள்ளனர். செய்தியாளர்களுக்கு வழிவிடாமல், தங்களுக்குள் மாறி மாறி போட்டோ எடுத்துக்கொண்டு, உண்மையான பிரஸ் மீடியாவை விழா முழுவதிலும் புறக்கணிக்கும் வகையில் நடந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் சாயம் வெளுத்துவிட்டது! முதல்வர் விஜய்யின் மௌனத்தை சாடி ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!
அடுத்ததாக மேடையில் மைக் பிடித்த போளூர் தவெக எம்எல்ஏ அபிஷேக், "3,362 பயனாளிகளுக்கு ரூ.15 கோடி மதிப்பில் உதவிகள் வழங்கப்படுகிறது" என கெத்தாக அறிவித்தார். ஆனால், அடுத்து வந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்தோ, "2,207 பேருக்கு ரூ.7.5 கோடி மதிப்பில் தான் உதவிகள்" என அப்படியே பாதியாக குறைத்து 'டேட்டா' கொடுத்தார். "அப்போ மீதி 7.5 கோடி எங்கே?" என பொதுமக்களும், அதிகாரிகளும் ஒருவரையொருவர் பார்த்து குழம்பிப் போயினர்.
இதுபோதாதென்று, அமைச்சர் மேடையில் உருக்கமாகப் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், கூட்டத்தில் டீ மற்றும் பிஸ்கட் விநியோகிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தில் கடுப்பான அமைச்சர், கடுப்பாகி தனது பேச்சை ஒரு நிமிடம் நிறுத்த வேண்டியதாயிற்று.
"தவறு செய்தால் முதல்வர் தூக்கிவிடுவார்" என்று அமைச்சர் மேடையில் பேசிக்கொண்டிருக்க, கீழே மேடைக்குக் கீழே அடுத்தடுத்து நடந்த குளறுபடிகள் விழாவுக்கு வந்தவர்களை முணுமுணுக்க வைத்தது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் இரு மடங்கு கடன்! தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்!