அரியலூர் மாவட்டத்தின் கனிம வளங்களைப் பயன்படுத்திப் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் வர்த்தகம் செய்யும் சிமெண்ட் ஆலைகள், உள்ளூர் மக்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு அவர்கள் அதிரடிக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரியலூர் அருகே உள்ள ஓட்டக்கோவில் கிராமத்தில், தனியார் சிமெண்ட் ஆலைக்குச் சொந்தமான சுரங்கப் பகுதியில் 2,000 மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர் பிரபு, அதன் பின்னர் சிமெண்ட் ஆலை நிர்வாகத்திற்கும் அரசு அதிகாரிகளுக்கும் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கிப் பேசினார்.
அவர் பேசுகையில், கனிம வளங்கள் நிறைந்த அரியலூர் மாவட்டத்திலிருந்து பெறப்படும் வளங்களைக் கொண்டு உற்பத்தியாகும் சிமெண்ட், இன்று நாட்டின் பல்வேறு பெரிய கட்டடங்கள் மற்றும் பிரம்மாண்ட கட்டுமானங்களுக்குப் பயன்படுகிறது. ஆனால், அதே வேளையில் இந்த மாவட்டத்திலேயே இன்னும் குடிசைகளிலும், வீடின்றியும் வாழும் சாமானிய மக்களுக்குத் தரமான வீடுகளைக் கட்டிக் கொடுப்பது இந்தச் சிமெண்ட் ஆலைகளின் சமூகக் கடமையாகும் (CSR). அதுமட்டுமன்றி, இந்தத் தொழிற்சாலைகளில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பில் முழு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என மிகவும் அழுத்தமாக வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் பாட்டில்களுக்கு ₹10 டெபாசிட் மட்டுமே! அமைச்சர் விக்னேஷ் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

தொடர்ந்து அதிகாரிகளை நோக்கிப் பேசிய அமைச்சர், ஏதோ ஒரு திட்டத்திற்காக நிதியைச் செலவிடுவதைத் தவிர்த்துவிட்டு, சிஎஸ்ஆர் மற்றும் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை நிதியின் மூலம் உள்ளூர் மக்களை நேரடியாக அழைத்து அவர்களின் உண்மையான குடிநீர் மற்றும் மருத்துவத் தேவைகளைக் கேட்டறிந்து, அதனை முழுமையாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றார்.
மேலும், இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாக அழித்து உருவாக்கப்படும் வளர்ச்சி உண்மையான வளர்ச்சியல்ல என்றும், தொழில் வளர்ச்சியும் இயற்கை பாதுகாப்பும் எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். வருங்கால சந்ததியினருக்காக ஒவ்வொருவரும் ஆண்டுக்குக் குறைந்தது ஐந்து மரக்கன்றுகளையாவது நட்டு, அவை மரமாக வளரும் வரை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி வளமான மற்றும் பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: ஜம்முவில் நாட்டின் 7-ஆவது மண்டல வானிலை மையம்! மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்!