தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து திமுக உயர்மட்டத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ள இந்த இரு தொகுதிகளிலும் திமுக போட்டியிடுவது தொடர்பான முடிவுகள் இறுதி செய்யப்படும் நிலையில், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த இரு தொகுதிகளும் காலியானதற்கு காரணம், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததே ஆகும். மதுராந்தகம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேலும், தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமாவும் மே மாதம் 25ஆம் தேதி எம்.எல்.ஏ. பதவியைத் துறந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் இந்த இரு இடங்களும் காலியாகி, தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.
தமிழகத்தில் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாக இருந்தாலும், நீதிமன்றத் தடை காரணமாக மற்ற ஐந்து தொகுதிகளுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல், இந்த இரு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6 தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றபோதும், திமுக கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது. எனவே இடைத்தேர்தலில் திமுக களம் இறங்குவது குறித்து உயர்மட்டத்தில் ஆலோசனை அவசியமானது.
இதையும் படிங்க: குண்டு கட்டாக வெளியேற்றம்... பேரவையில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு..!!

இதற்காக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், திருப்பூர் மாவட்டக் கழக செயலாளர் இள பத்மநாபன், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்ளிட்டோரும் தொகுதிப் பிரதிநிதிகளும் அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தனர். இந்த ஆலோசனையில் மும்முனைப் போட்டி நிலவும் என்பதால் வெற்றி வாய்ப்பு எவ்வாறு அமையும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தவெக ஆட்சிக் கட்சியாக இருப்பதால் அதையும் அதிமுகவையும் எதிர்த்து களம் காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் வியூகத்தை உருவாக்குவது, வாக்கு வங்கிகளை ஒருங்கிணைப்பது, உள்ளூர் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. வேட்புமனுத் தாக்கல் இன்று (செப்டம்பர் 9) தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால், வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்தும் ஆலோசனை நடந்தது.
இந்த இடைத்தேர்தல், புதிய அரசின் முதல் தேர்தல் சோதனையாகவும், எதிர்க்கட்சிகளின் வலிமையை அளவிடும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. திமுக இறுதி முடிவை எடுத்து வேட்பாளர்களை அறிவித்தால், அதிமுக, தவெக, திமுக ஆகிய மூன்று முக்கிய கட்சிகளும் களத்தில் இறங்கி கடும் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் அடுத்த அரசியல் களம் எது? ஸ்டாலின் கொடுத்த முக்கிய ஆஃபர்!! என்ன தெரியுமா??