சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். பாபு 82,997 வாக்குகளையும், ஸ்டாலின் 74,202 வாக்குகளையும் பெற்றனர். இந்த முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்டாலின் தரப்பில் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஸ்டாலின் தரப்பு சில வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களைச் சரிபார்க்க விண்ணப்பம் செய்தது. அதன்படி 14 வாக்குச்சாவடிகளில் உள்ள இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின்போது சில இயந்திரங்கள் செயல்படவில்லை, சிலவற்றில் முரண்பாடுகள் தென்பட்டன என்றும், குறிப்பாக சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கும் விவிபேட் சீட்டுகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்ததாகவும் ஸ்டாலின் தரப்பு குற்றம் சாட்டியது. இந்த முறைகேடுகள் காரணமாக அனைத்து 286 வாக்குப்பதிவு இயந்திரங்களையும் விவிபேட் சீட்டுகளையும் முழுமையாகச் சரிபார்க்க வேண்டும் என்றும், பாபுவின் வெற்றியை செல்லாததாக அறிவித்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். தேர்தல் ஆணையம் மற்றும் பாபு தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தன. தேர்தல் ஆணையம் தரப்பில், சரிபார்ப்பு முறையாக நடைபெற்றதாகவும், எந்தவித முறைகேடும் இல்லை என்றும், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கொளத்தூருக்கு V.S. பாபு தான் எம்எல்ஏ..! ஸ்டாலின் வழக்கு தள்ளுபடி..! ஹை கோர்ட் அதிரடி..!!
ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகம் விமர்சனம் செய்துள்ளது. கொளத்தூர் மக்களால் ஏற்கனவே தள்ளுபடி , த.வெ.க வெற்றியை எதிர்த்த வழக்கும் தள்ளுபடி, எந்திரக் கோளாறு என்று தந்திரமாக உருட்டியதும் தள்ளுபடி, அறிவாலய அரைவேக்காடுகளால் வழக்கு விசாரணைக்கே உகந்தது அல்ல என்று தள்ளுபடி என்று கூறியுள்ளது. இன்னும் எத்தனைத் தள்ளுபடிகள் காத்திருக்கிறதோ என்றும் விமர்சித்து உள்ளது.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு.. கொளத்தூர் தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!