தமிழக சட்டசபைத் தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் இன்று கொடைக்கானலுக்கு ஓய்வு எடுக்கச் செல்கிறார். தீவிர பிரசாரத்துக்குப் பின் சிறிது நேரம் குளுகுளு மலைக்காற்றில் ஓய்வெடுக்கும் வழக்கத்தைத் தொடர்ந்து, அவர் இந்த முறையும் அதே இடத்தைத் தேர்வு செய்துள்ளார்.
சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து காரில் மாலை கொடைக்கானல் செல்லும் ஸ்டாலின், பாம்பர்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.
இந்த இடம் அவருக்கு சென்டிமென்ட் நிறைந்தது. 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் ஆகிய மூன்று முறையும் ஓட்டுப்பதிவுக்குப் பின் இங்கு தங்கியபோது தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. அதனால் இந்த முறையும் அதே அறையில் மூன்று நாட்களுக்கு மேல் தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தின் வளர்ச்சியில் அதிமுகவுக்கு முக்கிய பங்கு இருக்கு!! ராகுல்காந்தி பேச்சால் திமுக தலைமை ஷாக்!!

கட்சியினர் கூறுகையில், “முதல்வர் கொடைக்கானலைத் தேர்வு செய்வது நல்ல சகுனம். இங்கு வந்தால் வெற்றி உறுதி என்ற நம்பிக்கை உள்ளது” என்றனர். ஸ்டாலின் குடும்பத்துடன் இங்கு தங்கியிருக்கும் போது கோயில்களுக்குச் செல்வதில்லை. ஆனால் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பூம்பாறை குழந்தை வேலப்பர், மூஞ்சிக்கல் பெரிய மாரியம்மன், குறிஞ்சியாண்டவர் உள்ளிட்ட கோயில்களில் வழிபாடு செய்வது வழக்கம்.
இதேவேளையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் களைப்பைப் போக்க தன் மனைவி மற்றும் மகளுடன் நேற்று துபாய் சென்றார். அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கும் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்க ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் இப்போது குளிர்ச்சியான இடங்களை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசியல் களம் சற்று அமைதியாகி, அடுத்த கட்ட நகர்வுகளுக்காக காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: பாட்ஷாவாக மாறிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!! ரஜினி ரசிகர்களை கவர பறக்குது பஞ்ச் டயலாக்!