தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, தானே, ராய்கட் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகரில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 100 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கனமழையுடன் மணிக்கு 68 முதல் 77 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசி வருவதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. மும்பை பாந்த்ரா அரசு காலனி அருகே குடியிருப்பு பகுதியில் மரம் ஒன்று சாய்ந்ததில், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் சேதமடைந்தன.
இதையும் படிங்க: ”ஒரு குண்டு போதும்... எல்லாரும் குளோஸ்...” - காமேனி இறுதிச்சடங்கிற்கு இடையில் வார்த்தையை விட்ட டிரம்ப்... உச்சக்கட்ட டென்ஷனில் உலக நாடுகள்...!
தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் 70 வயதுடைய முதியவர் உயிரிழந்தார். மேலும் சில வாகனங்களும் சேதமடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதிகளில் சுமார் 100 மரங்கள் சாய்ந்து விழுந்ததாகவும், அவற்றில் பல மரங்கள் மின்கம்பங்கள் மற்றும் வாகனங்கள் மீது விழுந்ததால் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தானே மாவட்டம் கல்வா ரயில்வே காலனியில், ஆபத்தைத் தவிர்க்கும் வகையில் கயிறு கட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மரம் கூட பலத்த காற்றைத் தாங்க முடியாமல் வேரோடு சாய்ந்தது. எனினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படாதது அதிர்ஷ்டவசமாக அமைந்தது.
ராய்கட் மாவட்டத்திலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில் ஒரு அடிக்கு மேல் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் ஆமை வேகத்தில் நகர்ந்தன. மும்பை–கோவா தேசிய நெடுஞ்சாலையிலும் வெள்ளநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு சாலையின் தடுப்புச் சுவரில் மோதி சிக்கிக் கொண்ட பேருந்தை, வாகன ஓட்டிகள் ஒன்றிணைந்து அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே, மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்கட் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மும்பை, தானே, பால்கர், ராய்கட் மற்றும் நவி மும்பை பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!