அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் மூத்த தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் இன்னும் கூட்டணியில் இணையாமல் இருப்பது கட்சியின் உள்ளக அரசியலில் தொடரும் மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடங்கிய தலைமைப் போட்டி, கட்சியின் பிளவு, அதிகாரப் போராட்டம் ஆகியவை இன்றும் தீர்க்கப்படாமல் இருப்பதால், ஓபிஎஸ் தனித்து நிற்கும் நிலை தொடர்கிறது.அ.தி.மு.க.வில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே ஏற்பட்ட மோதல் 2017ஆம் ஆண்டு முதலே தீவிரமடைந்தது.
ஜெயலலிதாவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்த ஓபிஎஸ், பலமுறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர் என்ற அடிப்படையில் கட்சியில் தனது செல்வாக்கைப் பேண முயன்றார். ஆனால், இபிஎஸ் படிப்படியாக கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் தன் வசமாக்கினார். 2022இல் நடைபெற்ற பொதுக்குழுவில் இபிஎஸ் தன்னை பொதுச்செயலாளராக அறிவித்து, ஓபிஎஸ் உள்ளிட்ட எதிர்ப்பு தரப்பினரை கட்சியிலிருந்து நீக்கியது மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனால் ஓபிஎஸ் தனித்து செயல்படத் தொடங்கினார்.

தற்போது 2026 தேர்தலை எதிர்கொள்ளும் சூழலில், அ.தி.மு.க. பாஜக உடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பாமகவும் இணைந்துள்ளது. இபிஎஸ் தலைமையிலான இந்தக் கூட்டணி வலுவாகத் தயாராகி வருகிறது. ஆனால், ஓபிஎஸ் இதில் இணையவில்லை. பிரதமர் வருகையின் போது பார்க்க நேரம் கொடுக்காத நிலையில் ஓபிஎஸ் NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்து விட்டதால் ஓபிஎஸ்ஸும் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுப் பெண்கள் தாலி அறுக்க பாக்குறீங்களா ஸ்டாலின்? டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் தாக்கு..!
தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ஓபிஎஸ் இணைந்தால் என் டி ஏ கூட்டணி இன்னும் பலம் ஆகுமா என்ற கேள்விக்கு இப்போதே என் டி ஏ கூட்டணி பலமாக தான் இருக்கிறது என்று பதிலளித்தார். என் டி ஏ கூட்டணியில் ஓபிஎஸ் இணைவதாக வந்த தகவல் குறைத்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இவ்வாறு தெரிவித்தார். ஓபிஎஸ் வராவிட்டால் பரவாயில்லை எனக் கூறுகிறீர்களா என்ற கேள்விக்கும் அப்படி எல்லாம் இல்லை என்றும் பதிலளித்தார்.
இதையும் படிங்க: விருதுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்! 77-ஆவது குடியரசு தினத்தை ஆளுநர் மாளிகையில் கொண்டாடிய முக்கியப் பிரமுகர்கள்.