எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை (மே 3) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வு அனுமதிச்சீட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) தேர்வர்களுக்கு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். முறையான சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே செல்லுமாறு NTA அறிவுறுத்தியுள்ளது. முற்பகல் 11 மணி முதல் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும். 1.30 மணிக்குப் பிறகு வருபவர்களுக்கு தேர்வு அனுமதி கிடையாது.
மாணவர்கள் எளிமையான உடைகளை அணிந்து வர வேண்டும். ஷூக்களுக்கு பதிலாக சாதாரண காலணிகளை அணியலாம். மதம் மற்றும் கலாசார ஆபரணங்கள் அணிந்து வருபவர்கள் கூடுதல் சோதனைக்கு ஆளாக நேரிடும் என்பதால் சற்று முன்னதாகவே வர வேண்டும். குளிர் அதிகம் உள்ள இடங்களில் கம்பளி உடைகளுக்கு முன் அனுமதியுடன் அனுமதி அளிக்கப்படும்.
இதையும் படிங்க: இந்திய நெடுஞ்சாலைகளில் புதிய புரட்சி..!! தடையற்ற சுங்கக் கட்டண முறை குஜராத்தில் அறிமுகம்..!!

தேர்வு மையத்துக்கு செல்லும் போது செல்போன், ஹியர்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கடிகாரம், உலோகப் பொருட்கள், பை, பர்ஸ், பென்சில் பாக்ஸ் உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. நீரிழிவு நோயாளிகள் முன் அனுமதியுடன் மாத்திரை, ஆப்பிள், வாழைப்பழம், தெளிவான பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்லலாம்.
முக்கிய எச்சரிக்கை: தேர்வு மையத்தை கண்டுபிடிக்க கூகுள் மேப்பை முழுமையாக நம்பக் கூடாது. சில இடங்களில் தவறான தகவல்களை காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே அனுமதிச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை சரியாக சரிபார்த்து, முன்கூட்டியே இடத்தை நேரில் சென்று பார்த்து, பயணத்தை திட்டமிடுமாறு NTA வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசல், மழை உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு சீக்கிரமாக புறப்பட வேண்டும்.
அனுமதிச்சீட்டுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அசல் அடையாள அட்டை மற்றும் தேவையான சான்றிதழ்களை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வர்கள் அமைதியாகவும், நம்பிக்கையுடனும் தேர்வை எதிர்கொள்ளுமாறு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மாணவர்களே கவனிங்க..! நீட் தேர்வு...! புதிய ஆடை கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!!