நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. தாராபுரம் பகுதியில் நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதால் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முதல் சம்பவம் அக்டோபர் 2ஆம் தேதி நடந்தது. தாராபுரம்-உடுமலை மாநில நெடுஞ்சாலையில் நாம் தமிழர் கட்சியினர் அனுமதியின்றி ஃப்ளெக்ஸ் பேனரை வைத்திருந்தனர்.
அதை அகற்ற முயன்ற போலீசாரை கட்சி நிர்வாகிகள் தடுத்தனர். அப்போது அவர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி போலீசாரை திட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பேனரை அகற்றி வழக்குப்பதிவு செய்ததால் கோபமடைந்த கார்த்திகா உள்ளிட்டோர் தாராபுரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் தகாத வார்த்தைகளால் போலீசாரைத் தாக்கிப் பேசியதுடன், காவல்துறையினர் தங்களது பணியைச் செய்யவிடாமல் தடுத்தனர்.

மேலும் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்தை பாதிக்கும் வகையில் நடந்துகொண்டனர். இந்தச் செயல்களுக்காக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட எட்டு நபர்கள் மீது தாராபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இரண்டாவது சம்பவம் அக்டோபர் 4ஆம் தேதி நடந்தது. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சர் மேற்கொண்ட ரோடு ஷோ செல்லும் வழியில் நாம் தமிழர் கட்சியினர் அனுமதியின்றி கூடினர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு ரோடு ஷோவுக்கு இடையூறு விளைவித்தனர்.
இதையும் படிங்க: நாதக நிர்வாகிகள் கைதுக்கு எதிர்ப்பு: அக். 24-ல் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!
அப்போது போலீசாரைத் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கார்த்திகா உள்ளிட்ட 57 பேர் மீது தாராபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த இரண்டு சம்பவங்களிலும் அனுமதியற்ற பேனர் வைப்பு, காவல்துறையினரின் பணியைத் தடுத்தல், தகாத வார்த்தைகள் பயன்படுத்துதல், சாலை மறியல் மற்றும் முற்றுகை போன்ற செயல்கள் இடம்பெற்றதாக காவல்துறை விளக்கியுள்ளது. இதன் அடிப்படையில் கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “கோமாளி விஜய் ஆட்சி ஒழிக...” - சிறைக்குச் செல்லும் முன்பு எரிமலையாய் குமுறிய கார்த்திகா... அதிகாலை 3 மணிக்கு நடந்த அவலம்...!