ஒடிசா மாநிலம் இந்தியாவின் தங்கச் சுரங்கத் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம், ஒடிசாவின் பல மாவட்டங்களில் பெரிய அளவிலான தங்க வைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஒடிசா மாநிலத்தில் 10 முதல் 20 மெட்ரிக் டன் தங்கச் சுரங்கங்கள் இருப்பதற்கான சாத்தியத்தை இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) கண்டறிந்துள்ளது.

சுந்தர்கர், நபரங்கபூர், கியோன்ஜர், தியோகர், அங்குல், கோராபுட், மயூர்பஞ்ச், மல்கங்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய மாவட்டங்களில் தங்க வைப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பு, இந்தியாவின் தங்க இறக்குமதியை குறைத்து, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆம்புலன்சுக்கே பணம் இல்ல... இறந்த மகளின் உடலை 14 கி.மீ. தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தந்தை
தியோகர் மாவட்டத்தின் அடாஸ்-ராம்பள்ளி பகுதியில் முதல் தங்கச் சுரங்க ஏலம் நடைபெற உள்ளது, அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது ஒடிசா அரசு. இது ஒடிசாவின் சுரங்கத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். கியோன்ஜர் மாவட்டத்தில் கோபூர்-கஜிபூர், மங்கட்சுவான், சலேகனா, திமிரிமுண்டா ஆகிய இடங்களிலும், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஜோஷிபூர், சூரியகுடா, ருவான்சி, இடெல்குச்சா, மரேடிஹி, சுலைபட், படம்பஹர் ஆகிய பகுதிகளிலும் ஆய்வுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) மற்றும் ஒடிசா சுரங்கக் கழகம் இணைந்து இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தக் கண்டுபிடிப்பு ஒடிசாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஆண்டுதோறும் 700-800 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது, ஆனால் உள்நாட்டு உற்பத்தி 1.6 மெட்ரிக் டன்னாக மட்டுமே உள்ளது. இந்த புதிய வைப்புகள் இந்த இடைவெளியைக் குறைக்க உதவும். மேலும், தங்கச் சுரங்க ஏலங்கள் மூலம் முதலீடுகளை ஈர்க்கவும், மாநில வருவாயை அதிகரிக்கவும் ஒடிசா தயாராகி வருகிறது.

தியோகரில் நடைபெறும் செப்பு-தங்க ஆய்வு 2025 இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு, ஒடிசாவை உலகளாவிய தங்கச் சந்தையில் முக்கிய பங்காற்றியாக மாற்றும் திறனை உடையது.
இதையும் படிங்க: #BREAKING: திமுகவிற்கு இபிஎஸ் திடீர் அழைப்பு... அரசியலில் தலைகீழ் திருப்பம்.!