மேற்காசியாவில் தொடரும் போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில், பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், ஈரான் சென்றுள்ளார். அங்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) அவரை விமான நிலையத்தில் ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றார்.
சமீபத்தில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற முதல் கட்ட அமைதி பேச்சு 21 மணி நேரம் நீடித்தும், இறுதி உடன்பாடு எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது. தற்போது அமலில் உள்ள தற்காலிக போர் நிறுத்தம் வரும் 21ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு வழி தயாரிப்பதில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் அசிம் முனீர் தலைமையிலான உயர்மட்டக் குழு ஈரான் சென்றது. விமான நிலையத்தில் அவரை வரவேற்ற அப்பாஸ் அராக்சி, இருவரும் நீண்ட நேரம் இருதரப்பு ஆலோசனையில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் அதிபர் ஷெபாஸ் ஷரீப் அளித்த பொறுப்பின் அடிப்படையில், ராணுவத் தலைவர் முனீர் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் முக்கிய பணியை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்?! பாக்., ராணுவ தளபதி அசின் முனீர் கதறல்!
மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர், ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து தடை, உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே இந்த முயற்சியின் நோக்கம். பாகிஸ்தான் இரு தரப்புக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாலமாகச் செயல்பட்டு வருகிறது. முதல் கட்ட பேச்சில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இரண்டாவது சுற்று பேச்சுக்கு ஈரான் தரப்பின் நிலைப்பாட்டை அறிந்து, அமெரிக்காவுக்கு செய்தி கொண்டு செல்லும் பணியில் முனீர் ஈடுபட்டுள்ளார்.
ஈரான் தரப்பில் இந்த வரவேற்பு சுமூகமான சூழலை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் உள்ளிட்ட தலைவர்களும் பிராந்திய நாடுகளுடன் தொடர்பில் இருந்து அமைதிக்கு ஆதரவு தரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உலக நாடுகள் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
இந்த முயற்சி வெற்றி பெற்றால், மேற்காசியாவில் அமைதி நிலைபெற வாய்ப்பு உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு, உலகளாவிய எரிபொருள் சந்தை ஸ்திரப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த இராஜதந்திர முயற்சி, பிராந்திய அமைதிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை!! தூதரக அதிகாரிகள் தகவல்!!