பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசீப் தனது நாட்டின் வெளியுறவு கொள்கை குறித்து மிக கடுமையான ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அமெரிக்காவுடன் இணைந்து எடுத்த முடிவுகள் பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும், அமெரிக்கா தனது சுயநலனுக்காக பாகிஸ்தானை பயன்படுத்திவிட்டு கைவிட்டுவிட்டதாகவும் அவர் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சர் கவாஜா ஆசீப் கூறியதாவது: “அமெரிக்கா எங்களை பயன்படுத்தி கொண்டது. பிறகு டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது. 1999க்குப் பிறகு அமெரிக்காவுடன் மீண்டும் கூட்டணி வைத்த முடிவு, குறிப்பாக ஆப்கானிஸ்தானுடனான உறவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 2001க்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான ஆப்கன் போரில் பங்கேற்றதால் பாகிஸ்தான் நீண்டகால வன்முறை, பொருளாதார நெருக்கடி, தீவிரவாத பிரச்சினைகளை எதிர்கொண்டது.”
முன்னாள் ராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகியோர் பாகிஸ்தானை வெளிநாட்டு போர்களில் சிக்க வைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். “நாங்கள் சந்தித்த இழப்புகளை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது.
இதையும் படிங்க: உலக நாடுகளின் படை திரட்டும் பாக்.,!! முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து இஸ்லாமிய நேட்டோ அமைக்க முயற்சி!!

அந்த முடிவுகள் திருத்த முடியாத தவறுகள். அவை பாகிஸ்தானை மோதல்களில் பகடைக்காயாக மாற்றின. ஆப்கானிஸ்தான் மோதலில் நாங்கள் பங்கேற்றது மதக் கடமை என்று சொல்வது உண்மை இல்லை. தேவையில்லாத மோதல்களில் பங்கேற்றதால் பெரும் சேதம் ஏற்பட்டது. இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த ஒப்புதல் வாக்குமூலம் பாகிஸ்தான் – அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை தெளிவாக வெளிப்படுத்துகிறது. 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்காவின் “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்ற பெயரில் பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு அளித்தது. ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வெளியேறிய பிறகு பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டது. தலிபான் ஆட்சி திரும்பியதும், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தன.
அமைச்சர் கவாஜா ஆசீப்பின் இந்த பேச்சு சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் தனது வெளியுறவு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. அமெரிக்காவுடனான உறவில் பாகிஸ்தான் இனி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் பணிகள் மும்முரம்..! தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு... விஜய் முக்கிய அறிவிப்பு..!