சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக மீண்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து, தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களான திருச்சி மற்றும் மதுரையில் புதிய ஒருங்கிணைந்த பசுமை விமான நிலையங்களை உருவாக்குவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் திமுக ஆட்சிக் காலத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5,600 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன. இதுவரை சுமார் 1,700 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, பரந்தூர் திட்டத்தின் எதிர்காலம் குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது ஆட்சியில் உள்ள நிலையில், பரந்தூர் திட்டத்தை முன்னெடுக்காமல் மாற்று திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தமிழக அரசு தீவிரம்!

இந்த தகவல் விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது கருத்துப்படி, சென்னை விமான நிலையம் ஏற்கனவே தனது அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், சர்வதேச தரத்திலான இரண்டாவது விமான நிலையம் நகரத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஒன்றாகும். அதே நேரத்தில், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களின் வளர்ச்சியும் முக்கியமானது என்றாலும், அவை சென்னைக்கான மாற்றுத் திட்டமாக பார்க்கப்படக் கூடாது என வலியுறுத்துகின்றனர்.
மேலும், பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் மாநில தலைநகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுப்பதாகவும், பரந்தூர் திட்டத்தில் ஏற்படும் தாமதம் தமிழக வளர்ச்சி குறித்த கேள்விகளை எழுப்பக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையே, பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், 2028 ஆம் ஆண்டு வரை இந்த விவகாரம் குறித்து பொது விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் வெளியிடாததால், பரந்தூர் திட்டத்தின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: இதென்னடா வம்பா போச்சு! அமைச்சர்களின் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்!