தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று ஆகியவை இனி அச்சிடப்பட்டு வழங்கப்படாமல், முழுமையாக டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதியன்று புதிய அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதில், வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றுகள் வழங்கும் முறை நிறுத்தப்பட்டு, அவை அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மின்னணு வடிவில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த அதிரடி அரசாணையை எதிர்த்து, பெங்களூருவைச் சேர்ந்த ஃபேர்ஸ் ஐடென்டிபிகேஷன் என்கிற தனியார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பாக எதிர்காலத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்படக்கூடிய சட்டத் திருத்தங்களை முன்கூட்டியே சுட்டிக்காட்டி, அதனை இப்போதே அவசர அவசரமாகத் தமிழகத்தில் அமல்படுத்த முடியாது. மேலும், பொதுமக்கள் பலருக்கும் இணைய வசதி மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் போதிய தொழில்நுட்பப் புரிதல் இல்லாத சூழலில், இத்திட்டம் சாமானிய மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, இவ்வழக்கு இறுதியாக முடிவுக்கு வரும் வரை, வழக்கம்போலப் பழைய நடைமுறையிலேயே ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றுகளை நேரடியாக அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு!

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், செப்டம்பர் 10-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை குறித்தும், மனுதாரரின் கோரிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு தரப்பில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் திட்டவட்டமாக உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: விவசாய இலவச மின்சாரத்தில் தட்கல் முறை ரத்தாகுமா? ₹2,431 கோடி தணிக்கை குறித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!