செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் பங்கேற்கும் பிரம்மாண்டத் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறவுள்ள நிலையில், காவல்துறையின் தீவிர வழிகாட்டு நெறிமுறைகளின்படி முன்கூட்டியே கியூஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு பெற்ற 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தவெக தலைமை நிலையச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் ஆளும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, முதலமைச்சர் விஜய் நாளை (செப்டம்பர் 25, வெள்ளிக்கிழமை) மாலை 3:00 மணியளவில் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே அமையப்பெற்றுள்ள பிரம்மாண்ட திடலில் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டுப் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க மாவட்ட நிர்வாகிகளால் முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சியாக மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

இது தொடர்பாகத் தவெக பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் வெளியிட்டுள்ள தலைமை நிலையச் செயலக அறிவிப்பில், காவல்துறையின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கியூஆர் (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 5,000 பேர் மட்டுமே கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அனுமதிச் சீட்டு இல்லாத வேறு எவருக்கும் எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. இந்த கியூஆர் குறியீடு அனுமதிச் சீட்டானது முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை முன்வைத்து மிக முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ள அமைச்சர் என்.ஆனந்த், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்-சிறுமியர், பள்ளி மாணவ-மாணவியர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டோருக்குக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான கியூஆர் குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை; எனவே அவர்கள் எவரும் நேரில் வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனுமதிச் சீட்டு பெற்றவர்களுக்குத் தேவையான குடிநீர், தற்காலிக மருத்துவ அவசர வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் வீண் அலைச்சலைத் தவிர்த்து, இந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள நேரலைகளில் கண்டுகளித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!