துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி பறந்துகொண்டிருந்த ஃப்ளை துபாய் விமானம் FZ1073-ல் புதன்கிழமை திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் காக்பிட்டில் விமானிக்கும் துணை விமானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இந்திய விமானி ஸ்மித் மச்சார் கத்தியால் காயமடைந்தார். இதையடுத்து விமானம் திடீரென சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தை இழந்தது.
காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவைத் திறக்க உதவிய நிலையில், உள்ளே வந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் தாக்குதல் நடத்தியத துணை விமானியை கட்டுப்படுத்தினர். விமானத்தில் இருந்த மாற்றுப் பணிக்குழுவைச் சேர்ந்த விமானிகள் பின்னர் விமானத்தை சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். விமானத்தில் 174 பேர் இருந்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டியுள்ளார். இதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் இந்த சம்பவம் குறித்து பேசியபோது இந்திய விமானியின் செயல்பாட்டை பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்... கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரியும் என டிரம்ப் நம்பிக்கை!
இந்த பரபரப்பான சம்பவத்திற்கு மத்தியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இரு தலைவர்களின் தொலைபேசி உரையாடலின்போது, இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முக்கியமான தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
மேலும், இந்தியா - அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளின் மக்களின் நலனுக்காக தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படவும் இரு தலைவர்களும் உறுதி தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நடைபெற்றுவரும் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் பிரதமர் மோடியும் அதிபர் ட்ரம்பும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். குறிப்பாக உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
மேலும், இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்பின் இந்த தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க தேர்தலுக்கு பின் மீண்டும் குண்டு வீச திட்டம்?! ஈரான் விவகாரத்தில் டிரம்பின் அடுத்த திட்டம்!