அரசாங்க மருத்துவ நடைமுறைகள் மற்றும் கள எதார்த்தங்கள் குறித்துத் துளியும் புரிதல் இல்லாமல், யாரையோ திருப்திப்படுத்துவதற்காகவும் சமூக வலைதள விளம்பரங்களுக்காகவும் அரசு மருத்துவர்கள் மீது வீண் பழி சுமத்துவது முற்றிலும் ஏற்புடையதல்ல என்றும், இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் ஓய்வெடுப்பதாகக் கூறி அண்மைக்காலமாக மக்கள் பிரதிநிதிகளும் சில அரசியல்வாதிகளும் வீடியோக்கள் எடுத்து வெளியிடுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு மருத்துவர்களின் சங்கம் இதற்குத் திட்டவட்டமான விளக்கத்துடனும் கடும் கண்டனத்துடனும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மருத்துவர்களின் பணிச்சூழல் குறித்துப் பேசிய சங்க நிர்வாகிகள், எந்தத் துறையிலும் இல்லாத அளவிற்கு 24 மணி நேரமும் இடைவிடாது பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் உள்ளனர்; மருத்துவர்கள் எப்போதும் நாற்காலியிலேயே அமர்ந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; அவர்களுக்கு எனத் தனி ஓய்வறை ஒதுக்கப்பட்டுள்ளது; சிகிச்சைக்கு நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தில் மருத்துவர் தூங்கினால்தான் தவறு; ஆனால் நோயாளிகள் யாரும் இல்லாத நேரத்தில் மருத்துவர் சென்று ஓய்வெடுப்பது எந்த வகையிலும் தவறாகாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

கள நிலவரத்தைச் சுட்டிக்காட்டிய சங்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் உள்ளிட்ட சிறிய மருத்துவமனைகளில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருப்பார்; அவர்களுக்கு எந்தவொரு ஷிப்ட் முறையும் கிடையாது; காலையில் 7:30 மணிக்குத் தொடங்கும் பணி மறுநாள் காலை 7:30 மணி வரை தொடர்ந்து நீடிக்கிறது; செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு ஷிப்ட் முறை உள்ள நிலையில், மருத்துவர்களுக்கு மட்டும் இந்த அடிமை பணிச்சுமை தொடர்கிறது என்று சுட்டிக்காட்டியது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூட அவசர சிகிச்சைப் பிரிவில் மட்டுமே மருத்துவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பார்கள் என்றும், மற்ற பிரிவுகளில் நோயாளிகள் இல்லாத சமயங்களில் மருத்துவர்கள் இளைப்பாறுவது இயற்கை என்றும் சங்கம் விளக்கமளித்துள்ளது.
தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், மருத்துவர்களுக்கும் ஷிப்ட் அடிப்படையில் பணி ஒதுக்க வேண்டும் என்று பலமுறை தமிழக அரசைத் தொடர்ந்து வலியுறுத்தியும் அந்தக் கோரிக்கை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை; அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவர் காலிப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் கிடக்கின்றன; மருத்துவர்களின் இத்தகைய அவல நிலைக்கு இந்தக் கடுமையான ஆள் பற்றாக்குறையே மூலக்காரணம்; அரசு உடனடியாக இந்தக் காலிப்பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!