தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் 23-ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பலம் மற்றும் அதில் இணையும் கட்சிகள் குறித்த முழு விபரங்கள் வெளியாகும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னை தி.நகரில் உள்ள ‘கமலாலயம்’ தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அவர் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் 23-ஆம் தேதி தமிழகம் வருகிறார். அன்று பிற்பகல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை அவர் முறைப்படி தொடங்கி வைக்கிறார். 'திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்' என்ற முழக்கத்துடன் இந்தப் பிரச்சாரம் அமையும். டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணையுமா அல்லது தேமுதிக வருமா என்ற கேள்விகளுக்கெல்லாம் வரும் 23-ஆம் தேதியன்று மேடையிலேயே விடை கிடைக்கும். கூட்டணியில் உள்ள அனைத்து முக்கியத் தலைவர்களும் அந்த மேடையில் பிரதமருடன் இடம் பெறுவார்கள் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.. 4 மாதங்களுக்கு மோடி இப்படித்தான் பேசுவார்! கார்த்தி சிதம்பரம் எம்.பி கிண்டல்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள ₹2,000 உரிமைத் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "கடந்த தேர்தலிலேயே எடப்பாடி பழனிசாமி ₹1,500 தருவதாகத் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். தற்போது அதில் ₹500 அதிகரித்து ₹2,000 என அறிவித்துள்ளார். இதனை 'ஈ அடித்தான் காப்பி' என்று சொல்வது முற்றிலும் தவறானது. இது ஒரு வளர்ச்சியை நோக்கிய முன்னெடுப்பு. மக்கள் மனதில் தற்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது" என எடப்பாடிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.
மேலும், ஓசூர் விமான நிலைய விவகாரம் குறித்துப் பேசிய அவர், அந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்றும், சில தொழில்நுட்ப ரீதியான விளக்கங்கள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தற்போது துளியும் நம்பிக்கையில்லை. 1967-இல் காங்கிரஸை முடித்த திமுக, இப்போது ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் நிலையில் உள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உயிரிழப்புகள் நடப்பது இந்த அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது எனச் சாடினார். மதுராந்தகம் பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும் என்பதில் பாஜக தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.
இதையும் படிங்க: அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், நலமும் கிடைக்கட்டும்..!! பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து..!!