தேசப்பிதா மகாத்மா காந்தியின் பெயரில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வந்த 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயரை அதிரடியாக மாற்றும் ஒன்றிய அரசின் புதிய மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். 'VB-G RAM G' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டத் திருத்தத்திற்குத் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும், இந்த 'அப்ரூவல்' வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் மற்றும் இடது சாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை 'காந்திய அடையாளத்தை அழிக்கும் முயற்சி' எனத் தொடர்ந்து விமர்சித்து வந்தன. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது நடந்த கடும் விவாதங்களுக்குப் பிறகு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. தற்போது குடியரசுத் தலைவரின் கையெழுத்து கிடைத்துள்ளதால், இனி 100 நாள் வேலைத் திட்டத்தின் அதிகாரப்பூர்வப் பெயர் மற்றும் அதன் வழிகாட்டுதல்களில் பெரும் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்துத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர், "பெயரை மாற்றியதன் மூலம் மகாத்மா காந்தியை மீண்டும் ஒருமுறை ஒன்றிய அரசு கொன்றுவிட்டது" என ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் திட்டத்திற்கான நிதிப் பொறுப்பை மாநிலங்கள் மீது சுமத்த ஒன்றிய அரசு திட்டமிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வரும் 24-ஆம் தேதி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இதற்கு எதிராகப் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் இந்த ஒப்புதல் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது; "பழிவாங்கும் அரசியலை நிறுத்துங்கள்" ப.சிதம்பரம் காட்டம்!
இதையும் படிங்க: காந்தி பெயரை வைத்து அரசியல் பண்ணுறாங்க! – எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை பதிலடி