ஆந்திரா ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 13-ஆம் தேதி தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் 24-ஆம் தேதி வரை நடக்கிறது. உலகின் 140 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். இந்தச் சிறப்பு வாய்ந்த விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார்.
புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் விமான நிலையத்தில் ஜனாதிபதியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பூங்கொத்து கொடுத்து அன்போடு வரவேற்றார். பின்னர், பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துகொண்டார். முதலில் பகவான் சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு உரையாற்றிய ஜனாதிபதி, “பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா கோடிக்கணக்கான மக்களை தன்னலமற்ற சேவையில் ஈடுபட வைத்த உந்து சக்தியாக விளங்கினார். மனிதனுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை என்று அவர் வாழ்ந்து காட்டினார். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்கள் அவரது போதனைகளால் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார்கள். இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இதையும் படிங்க: புட்டபர்த்தியில் கிடைத்த அனுபவம்!! ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா! பிரதமர் மோடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!!

அவரது போதனைகள் எந்நாளும் மனித குலத்துக்கு வழிகாட்டியாக இருக்கும். உலகமே ஒரு பள்ளிக்கூடம்; உண்மை, அன்பு, நன்னடத்தை, அகிம்சை, அமைதி ஆகிய ஐந்தும் அதன் பாடத்திட்டம் என்று அவர் நம்பினார்” என்று உருக்கமாகப் பேசினார். உரையின் முடிவில் “ஜெய்ஹிந்த், ஜெய் பாரத்” என்று கூறி நிறைவு செய்தார்.
சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. கல்வி, மருத்துவம், குடிநீர், ஏழைகளுக்கான சேவை என அனைத்துத் துறைகளிலும் அவர் தொடங்கிய திட்டங்கள் இன்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு பயனளித்து வருகின்றன. இந்த விழாவில் ஜனாதிபதியின் பங்கேற்பு இந்தியாவின் ஆன்மிக மற்றும் சேவை மரபுக்கு அரசு அளிக்கும் உயரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காலக்கெடு விவகாரம்!! ஜனாதிபதியின் 14 கேள்விகளும்! சுப்ரீம் கோர்ட்டின் பதில்களும்! முழு விவரம்!