திமுக தலைமையகம் அமைந்துள்ள சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முதல் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தாம்பரம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வான எஸ்.ஆர்.ராஜா அவர்களுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் அறிவாலயத்தில் திரண்டு தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று (மார்ச் 28) திமுக வெளியிட்ட 164 வேட்பாளர்கள் கொண்ட அதிகாரப்பூர்வ பட்டியலில், எஸ்.ஆர்.ராஜாவின் பெயர் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாகப் புதுமுகமான கிருத்திகா தேவி என்பவர் தாம்பரம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மூன்று முறை எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றி, தொகுதியில் நல்ல செல்வாக்கு கொண்ட எஸ்.ஆர்.ராஜாவுக்கு ஏன் சீட் மறுக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பி அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். வேட்பாளர் அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மீண்டும் எஸ்.ஆர்.ராஜாவுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: அறிவாலயத்தில் ஓபிஎஸ்! தென் மாவட்ட திமுக வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கினார் ஸ்டாலின்!

அறிவாலயத்தின் நுழைவாயில் அருகே ஆதரவாளர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திமுக இம்முறை 'வாரிசு' அரசியலைத் தவிர்க்கவும், புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே எஸ்.ஆர்.ராஜா, மனோ தங்கராஜ் மற்றும் கயல்விழி செல்வராஜ் போன்ற சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தாம்பரம் போன்ற முக்கியத் தொகுதியில் நீண்ட கால நிர்வாகி ஒருவருக்குச் சீட் வழங்கப்படாதது உள்ளூர் அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் தொகுதியில் திமுக-வை எதிர்த்து அதிமுக சார்பில் டி.கே.எம். சின்னையா போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், உட்கட்சிப் பூசல் திமுக-விற்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: சட்டப்போர் பலப்படும்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி வழக்கறிஞர்கள்!