புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தொகுதிப் பங்கீடு இன்று அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் என்.ஆர். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நீண்ட இழுபறிக்குப் பின் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 தொகுதிகளில், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் ரங்கசாமியே முதல்வர் என்பதும், கூட்டணிக்கு அவரே தலைமை தாங்குவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேசியக் கட்சியான பாஜக-வுக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 தேர்தலை விட இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்டு வந்த பாஜக, இறுதியில் 14 இடங்களில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி: அக்கவுண்டில் கிரெடிட்டான ரூ.5,000..!! குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத் தலைவிகள்..!!

பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளுக்குள், கூட்டணியில் உள்ள அதிமுக உள்ளிட்ட பிற தோழமைக் கட்சிகள் தங்களுக்குத் தேவையான இடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்த பேச்சுவார்த்தை தற்போது பாஜக தலைமையுடன் நடைபெற்று வருகிறது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் முன்பே, ஆளும் கூட்டணி முந்திக் கொண்டு இடங்களை ஒதுக்கியிருப்பது அரசியல் களத்தில் அக்கூட்டணியின் பலத்தைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொகுதிப் பங்கீடு முடிந்துள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் இரு கட்சிகளும் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முதல்வர் ரங்கசாமி வரும் ஞாயிற்றுக்கிழமை தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரி தேர்தல் களம்: 28 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!