என்டிஏ (தேசிய தேர்வு முகமை) நடத்தும் தேர்வுகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேனி தலைமையில் மத்திய அரசு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடியும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி எழுப்பிய கருத்து அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபாவில் பேசிய பிரியங்கா, இந்தியாவின் தேர்வு முறையை சீரமைக்கும் குழுவில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆகியோருடன், "பசு கோமியம் நிபுணரும் இடம்பெற்றுள்ளார்" என்று விமர்சித்தார். இந்தக் கருத்து, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை குறிப்பிட்டே கூறப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
வி. காமகோடி சென்னை ஐஐடியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் எம்.எஸ். மற்றும் பி.எச்.டி. பட்டங்களைப் பெற்றவர். 2001-ஆம் ஆண்டு பேராசிரியராக இணைந்த அவர், 2022-ஆம் ஆண்டு சென்னை ஐஐடி இயக்குநராக பொறுப்பேற்றார். கணினி கட்டமைப்பு, தகவல் பாதுகாப்பு, வி.எல்.எஸ்.ஐ. வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சி செய்துள்ள அவர், இந்தியாவின் முதல் உள்நாட்டு 'சக்தி' மைக்ரோபிராசஸர் சிப் உருவாக்கப்பட்ட குழுவை வழிநடத்தியவர்களில் ஒருவர்.
இதையும் படிங்க: முட்டாள்கள்!! பார்லி.,-யில் பொரிந்து தள்ளிய ராகுல் காந்தி!! பாஜக எம்.பிக்கள் ஆவேசம்! அனல் பறந்த விவாதம்!

மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு, ரிசர்வ் வங்கி தொழில்நுட்ப குழு, தேசிய பங்குச் சந்தை தொழில்நுட்ப குழு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். 150-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள காமகோடி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய காமகோடி, நாட்டு மாடுகள் மற்றும் பசுவின் சிறுநீரின் மருத்துவப் பண்புகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதனையே அடிப்படையாகக் கொண்டு பிரியங்கா இந்த விமர்சனத்தை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சமூக வலைதளங்களிலும் கல்வியாளர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன. ஒருபுறம் பிரியங்காவின் விமர்சனத்தை சிலர் ஆதரிக்க, மற்றொருபுறம் காமகோடியின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பங்களிப்பை சுட்டிக்காட்டி பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்த விவகாரம் தேசிய அளவில் புதிய அரசியல் மற்றும் கல்வி விவாதமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அதிதீவிர ஆர்.எஸ்.எஸ் பின்புலம்.! யார் இந்த பிரகலாத் ஜோஷி? புதிய கல்வி அமைச்சரின் முழு பின்னணி தெரியுமா.?