கல்குவாரிகள் இயற்கை வளங்களை மிகவும் கடுமையாக பாதிக்கும் ஒரு முக்கியமான மனித செயல்பாடாக உள்ளன. இவை மிகப்பெரிய அளவில் கல், கிரானைட், ஜிப்சம் போன்றவற்றை எடுப்பதால், நில அமைப்பு, நீர், மண், காற்று, உயிரினங்கள் உள்ளிட்ட பல்வேறு இயற்கை அம்சங்கள் நிரந்தரமாக சேதமடைகின்றன. கல்குவாரி செயல்பாடு தொடங்கும் போதே முதல் பாதிப்பு நில அமைப்பிலேயே ஏற்படுகிறது.
மலைகள், குன்றுகள், பாறைப் பகுதிகள் வெடிபொருட்கள் கொண்டு வெடிக்கப்பட்டு, பெரிய இயந்திரங்களால் அகற்றப்படுகின்றன. இதனால் இயற்கையான நில அமைப்பு முற்றிலும் மாறுபடுகிறது. முன்பு இருந்த மலை அல்லது குன்று இடிந்து ஆழமான குழிகளாக மாறுகின்றன. இந்த மாற்றங்கள் நிரந்தரமானவை. பெரும்பாலான சமயங்களில் மீண்டும் இயற்கை நில அமைப்பை மீட்டமைப்பது சாத்தியமற்றதாக இருக்கிறது. மண் அரிப்பு இதன் மிகப் பெரிய விளைவாக ஏற்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இருக்கன்துறை பகுதியில் ஒரே இடத்தில் 20 கல்குவாரிகள் செயல்படுவதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கல்குவாரி செயல்பட்டாலே பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கும் பட்சத்தில் ஒரே இடத்தில் 20 கல்பாறைகள் செயல்பட அரசு எப்படி அனுமதி அளித்தது என்றும் அனுமதி இல்லாமல் கல்குவாரிகள் செயல்பட துணை நின்றது யார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: நெல்லை கவின் கொலை..! சிசிடிவி சமர்ப்பிக்க ஆணை..! மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு..!.
20 கல்குவாரிகளும் அரசு அனுமதியின்றி செயல்படுகிறதா என்று ஆராய வேண்டும் என்றும் மண்ணிற்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் இதுபோன்ற சட்டவிரோத கல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கனிமவளத்துறை அதிகாரிகளின் துணையோடு குவாரி உரிமையாளர்கள் அத்துமீறி வருகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவன் கொலைக்கு போதைப் புழக்கமே காரணம்..! நாடக அரசியல் திமுக... TVK கண்டனம்...!