நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது அரசியல் எதிர்காலம் குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ள நிலையில், அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன. சென்னை உத்தண்டியில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலுக்கு வருவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறினார்.
அரசியல் பயணம் தொடர்பாக ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளதாக தெரிவித்த ராகவா லாரன்ஸ், புதிய கட்சி தொடங்குவது அல்லது ஏற்கனவே உள்ள அரசியல் கட்சியில் இணைவது குறித்து விரைவில் இறுதி முடிவை அறிவிப்பேன் என்றார். தனது தாயார் முன்னிலையில் அந்த அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், தற்போதைய ஆட்சி குறித்து கருத்து தெரிவித்த அவர், கடந்த ஒரு மாத காலமாக ஆட்சியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக கூறினார். குறிப்பாக சில அமைச்சர்களின் பணிகளை பாராட்டிய அவர், கோவில்கள் அருகே இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றிய நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து ஆய்வு செய்ய அமெரிக்க மாணவர்கள் ஆர்வம்! பல்கலை.க்கு வந்து உரையாற்ற அழைப்பு!

முதல்வர் விஜயை விமர்சிப்பவர்கள் குறித்து பேசிய ராகவா லாரன்ஸ், சிலர் பொறாமை காரணமாகவே குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கூறினார். மேலும், தவெக தொண்டர்களை குறித்து பேசும்போது, அவர்கள் தற்குறி அல்ல, இலக்கை நோக்கிச் செல்லும் அம்புக்குறி எனக் குறிப்பிட்டார்.
தனது அரசியல் வருகை குறித்து மக்களின் கருத்தே முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். “நான் அரசியலுக்கு வர வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் ஆதரவு இருந்தால் வருவேன். இல்லையெனில் ஒதுங்கி நிற்பேன்” என்று கூறினார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கத் திட்டமிட்டிருந்த காலத்தில், தனக்கு அமைச்சர் பதவி குறித்து சிலர் பேசியதாகவும், ஆனால் பதவிகளை விட மக்களின் நலனே முக்கியம் என தான் கருதியதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை எத்தனை?! மூடப்பட்ட கடைகள் எவ்வளவு? பதிலளிக்க டாஸ்மாக் மறுப்பு!