டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி மக்களின் பணத்தை சத்தமில்லாமல் பறிப்பதாக பிரதமர் நரேந்திர மோடியை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடி பணவீக்க நாயகன். மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து சத்தமில்லாமல் பணத்தைப் பறிப்பதற்காகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தவணை முறையில் உயர்த்தி வருகிறார்கள்” என்று குற்றஞ்சாட்டினார்.
அவர் மேலும் கூறியதாவது, “ஒரு பொருளாதாரப் புயல் வரப்போகிறது என்று நான் முன்பே எச்சரித்து வருகிறேன். ஆனால் பிரதமர் மோடி தேர்தல்களில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். தேர்தல் முடிந்த அடுத்த நிமிடமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ₹8 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் தொடரும்” என்றார்.
இதையும் படிங்க: மோடி அரசின் தவறுக்கு பொதுமக்கள் விலை கொடுக்கின்றனர்..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!!

தேர்தல் காலத்தில் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளிப்பதும், தேர்தல் முடிந்ததும் பொதுமக்களின் பாக்கெட்டைப் பதம் பார்ப்பதுமே மோடி அரசின் வழக்கமாகிவிட்டதாக ராகுல் குற்றம்சாட்டினார். சாதாரண மக்களின் அன்றாட செலவுகளை இந்த விலை உயர்வு பெரிதும் பாதிக்கும் என்பதால், இது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போது நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து, பொருட்கள் கொள்முதல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என பொருளாதார நிபுணர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே உயர்ந்து வரும் பணவீக்கத்துடன் இந்த விலை உயர்வு சேர்ந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் பாதிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ராகுல் காந்தியின் இந்தக் கடும் விமர்சனம் மத்திய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. இந்த விலை உயர்வு வரும் நாட்களில் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மத்திய அரசு எடுக்கும் முதல் முக்கிய முடிவுகளில் ஒன்றாக இந்த விலை உயர்வு பார்க்கப்படுகிறது. இது மக்களின் அன்றாட வாழ்வை எப்படி பாதிக்கும் என்பதை அடுத்த சில வாரங்களில் தெளிவாகத் தெரியும்.
இதையும் படிங்க: "ஒட்டுமொத்த அரசே திருடப்பட்டது"..!! பாஜக மீது ராகுல் காந்தி கடும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு..!!