டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் திரிபுராவைச் சேர்ந்த பழங்குடியின மாணவர் அஞ்சல் சக்மா (24) கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது வெறுப்புக் குற்றம் என்றும், ஆளும் பாஜகவின் வெறுப்புப் பிரசாரமே இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த டிசம்பர் 9ஆம் தேதி அஞ்சல் சக்மாவும் அவரது சகோதரர் மைக்கேலும் செலகோய் சந்தைக்குச் சென்றனர். அப்போது போதையில் இருந்த மர்ம கும்பல் ஒன்று அவர்களை சீனர்கள் என்று நினைத்து திட்டியது. தாங்கள் இந்தியர்கள் என்று கூறியும் கேட்காத கும்பல் இருவரையும் கத்தியால் குத்தியது. பலத்த காயமடைந்த அஞ்சல் சக்மா 14 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். மைக்கேல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக இரு சிறார்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம் வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராகுல்காந்திக்கு சொந்த கட்சிக்குள்ளேயே வலுக்கும் எதிர்ப்பு! பிரியங்கா கையில் பொறுப்பு தர காங். தலைவர்கள் திட்டம்!

ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “டேராடூனில் அஞ்சல் சக்மா மற்றும் மைக்கேல் சக்மாவுக்கு நேர்ந்த சம்பவம் கொடூரமான வெறுப்புக் குற்றம். இது ஒரே இரவில் தோன்றுவதல்ல. பல ஆண்டுகளாக இளைஞர்களுக்கு மோசமான தகவல்களையும் பொறுப்பற்ற சித்தரிப்புகளையும் கொடுத்து உருவாக்கப்பட்டது.
வெறுப்பைப் பரப்பும் ஆளும் பாஜகவினால் இது சகஜமாக்கப்பட்டுள்ளது. மரியாதையும் ஒற்றுமையும்தான் இந்தியாவை கட்டமைத்துள்ளன. அச்சுறுத்தலும் துஷ்பிரயோகமும் அல்ல. நம் நாடு அன்பும் பன்முகத்தன்மையும் கொண்டது. சக இந்தியர்கள் தாக்கப்படும்போது அதை கண்டுகொள்ளாத பொறுப்பற்ற சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.
இச்சம்பவம் வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொய் பிரசாரத்தின் தலைவர்! நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்! ராகுல்காந்தியை வச்சு செய்யும் பாஜக!