இந்தியாவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்கள், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், தேர்தல் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: SIR நடவடிக்கைக்கு எதிராக பீகாரில் 16 நாட்கள் யாத்திரை.. நாளை தொடங்குகிறார் ராகுல் காந்தி..!
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்குகளைத் திருடுவதாகவும், இதற்கு "100% ஆதாரங்கள்" தங்களிடம் இருப்பதாகவும் கூறினார். இவை வெளியிடப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் என எச்சரித்தார்.

மகாராஷ்டிரத்தில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்டதாகவும், பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகள், தேர்தல் ஆணையத்தின் உயர் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் பாஜகவின் ஆதரவுடன் செயல்படுவதாகவும், இது தேசத்துரோக செயலாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இந்த நிலையில், வாக்காளர் உரிமை யாத்திரை என்ற ராகுல்காந்தியின் யாத்திரை பீகாரின் சசாரம் என்ற பகுதியில் இன்று தொடங்க உள்ளது. மாநிலம் முழுவதும் 16 நாட்களாக 1,300 கி.மீ.தூரம் நடைபெறும் இந்த யாத்திரை அடுத்த மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது.
ராகுல் காந்தியின் யாத்திரையில் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி மற்றும் பீகாரின் மெகா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: என்ன ஆதாரம் இருக்கு..? இப்படியா பண்ணுவீங்க? ராகுல் காந்தி புகாருக்கு தேர்தல் ஆணையம் கேள்வி..!