உக்ரைன் தலைநகர் கீவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா எந்த வகையிலும் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இன்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை வலியுறுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், “இந்தியாவால் எந்த வகையிலாவது உதவ முடியும் என்றால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார். தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்படவும் இந்தியா தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழியில் தீர்வு காண வேண்டும் என்ற நிலையை வலியுறுத்தி வருகிறது. போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது என்பதும், இரு தரப்பினரும் நேரடியாக உரையாட வேண்டும் என்பதும் இந்தியாவின் நிலையான கொள்கையாகும்.
ஜெய்சங்கரின் இந்த மூன்று நாள் பயணம் (செப்டம்பர் 3 முதல் 5 வரை) உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளை உள்ளடக்கியது. உக்ரைனில் சிபிஹாவுடன் இருதரப்பு ஆலோசனைகளை நடத்திய அவர், போலந்து துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கியுடன் விரைவில் சந்திப்பார். இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதோடு, பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் பொதுவான ஆர்வமுள்ள விவகாரங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றத்திற்கு வாய்ப்பளிக்கிறது.
இதையும் படிங்க: 3 நாள் பயணம்: உக்ரைன், போலந்துக்கு செல்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர்!!

சமீப நாட்களில் கருங்கடல் பகுதியில் மோதல் அதிகரித்துள்ள நிலையில், வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீதான தாக்குதல்கள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் தீவிரமாக விவாதித்தனர். இந்தியர்கள் உள்ளிட்ட பல நாட்டு மாலுமிகளின் பாதுகாப்பை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய தாக்குதல்கள் எந்தத் தரப்பினரால் நடத்தப்பட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இந்தியா அவற்றை கண்டிப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பை இவை பாதிக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ரஷிய அதிபர் விளாதிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
இந்தியா நடுநிலை வகித்து, அமைதியை முன்னிறுத்தி, இரு தரப்பினருடனும் உரையாடுவதன் மூலம் போர் முடிவுக்கு வழி வகுக்க முயன்று வருகிறது. உலகளாவிய தெற்கு நாடுகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு, நீடித்த அமைதிக்கான முயற்சிகளில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!