தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்க இருந்த அவரது அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரேவந்த் ரெட்டி, அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பிளாவட்னிக் அரசு பள்ளிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இதனுடன், இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டி தொடர்பான நிகழ்ச்சிக்காக எமிரேட்ஸ் மைதானத்திற்கும் அவர் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் பயணத்தைத் தொடர்ந்து ஆகஸ்ட் 30-ம் தேதி அமெரிக்கா செல்ல ரேவந்த் ரெட்டி திட்டமிட்டிருந்தார். இந்தப் பயணத்தின்போது ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் எனப்படும் எம்ஐடி வளாகங்களுக்கு அவர் செல்ல இருந்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டிக்கு கடிவாளம்? காங்கிரஸ் மேலிடத்தின் புதிய முடிவால் பரபரப்பு! வெடிக்கும் பூசல்?
மேலும், அமெரிக்காவில் பல்வேறு கல்வி மற்றும் நிர்வாகம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்தும் திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், நிர்வாக முறைகள் மற்றும் வளர்ச்சி சார்ந்த அம்சங்களை அறிந்து கொள்வதற்கான சந்திப்புகள் இடம்பெற இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அமெரிக்கா செல்ல மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என ரேவந்த் ரெட்டி அலுவலகம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் அரசியல் காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
அனுமதி கிடைக்காததால் திட்டமிட்ட அமெரிக்க பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு மற்றும் தெலுங்கானா அரசுக்கு இடையிலான உறவு தொடர்பாகவும் அரசியல் விவாதம் எழுந்துள்ளது.
இருப்பினும், அமெரிக்க பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான மத்திய அரசின் விரிவான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. தெலுங்கானா முதல்வர் அலுவலகம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு தரப்பில் விரிவான பதில் வெளியாகும் வரை, அனுமதி மறுப்பின் பின்னணி குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியாது.
ரேவந்த் ரெட்டியின் அமெரிக்கப் பயணம் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப மையங்களை பார்வையிடும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தனியாக வசித்த வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... மைனர் சிறுவன் தாயுடன் சேர்ந்து செய்த பயங்கரம்...!