2026 சட்டசபைத் தேர்தலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்களது தொகுதிகளை மாற்றி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஆளும் திமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தேர்தல் உத்தியின் ஒரு பகுதியாகவும், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) போன்ற புதிய போட்டியாளர்களை எதிர்கொள்ளும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
கொளத்தூர் தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், இம்முறை அத்தொகுதியை விட்டு வேறு இடத்துக்கு மாற திட்டமிட்டுள்ளார். கொளத்தூரில் கடந்த தேர்தலில் 70,000க்கும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்ற போதிலும், தொகுதியில் நடத்தப்பட்ட உள் சர்வே முடிவுகள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், முதல்வராக இருந்தாலும் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்ய வேண்டிய நெருக்கடி உள்ளதால், பெரிய தொகுதியான கொளத்தூரை விட்டு சிறியதும் பாதுகாப்பானதுமான தொகுதிக்கு மாற தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: முத்தரையர் மத்தியில் தி.மு.கவுக்கு செல்வாக்கு!! சர்வே முடிவால் அதிர்ச்சியில் இபிஎஸ்! பாஜ கொடுத்த அட்வைஸ்!
இதற்காக சென்னையின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சிறுபான்மையினர் அதிகம் வசிப்பதால், திமுக வேட்பாளருக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என்று கட்சி மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். தற்போது இத்தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இத்தொகுதிக்கு மாறுவதால், உதயநிதி ஸ்டாலின் தனது தாத்தா கலைஞர் கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதிக்கு மாறும் யோசனையில் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருணாநிதி இரு முறை திருவாரூரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கொளத்தூரில் முதல்வரின் மாதாந்திர வருகை, தொகுதி மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோரின் அடிக்கடி வருகை, அன்னதானம் போன்ற நிகழ்வுகள் திமுகவுக்கு சாதகமாக இருந்த போதிலும், புதிய போட்டி மற்றும் சர்வே முடிவுகள் தொகுதி மாற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் கட்சி வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: அமித் ஷா சீக்ரெட் ஆப்ரேஷன் சக்சஸ்!! தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! 3 நாள் விசிட்!