பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை – மகர விளக்கு சீசனில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த புலாவ் & சாம்பார் அன்னதானம் இனி முழுக்க முழுக்க கேரள பாரம்பரிய விருந்தாக மாறுகிறது.
திருவாங்கூர் தேவசம் போர்டு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. பக்தர்களுக்கு “கேரள சத்யா” என்று அழைக்கப்படும் உன்னி அப்பம், அவியல், ஓலன், காலன், பச்சடி, இஞ்சி புளி, பாயசம், பப்படம் உள்ளிட்ட 10-12 வகை பாரம்பரிய சைவ கேரள உணவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சபரிமலையில் தினமும் 80,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதானம் உண்கிறார்கள். இதுவரை புலாவ், சாம்பார், ரசம் மட்டுமே கொடுத்து வந்தோம். இனி கேரளாவின் உண்மையான பாரம்பரிய சுவையை பக்தர்கள் ருசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘கேரள சத்யா’ விருந்து திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இதையும் படிங்க: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!! தேவசம் போர்டு எடுத்த அதிரடி முடிவு..!!
இது விரைவில் தொடங்கப்படும். பாயசம், பப்படம், அவியல், கிச்சடி, பச்சடி, இஞ்சி புளி, தோரன், ஓலன், காலன், எரிசேரி என அனைத்தும் இருக்கும். கறி இல்லாத தூய்மையான சைவ உணவாக இருக்கும். இது ஐயப்ப பக்தர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும்” என்று உற்சாகமாக தெரிவித்தார்.

தற்போது சபரிமலையில் நிலமண்டல பூஜைக்காக தினசரி 70,000-80,000 பக்தர்கள் வருகை தருகின்றனர். மகர விளக்கு நாளன்று இது 5 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய அளவில் இலவச அன்னதானத்தை பாரம்பரிய உணவாக மாற்றுவது பெரும் சவாலாக இருந்தாலும், தேவசம் போர்டு தயாராக உள்ளது. ஏற்கனவே பம்பை, நிலக்கல், எருமேலி உள்ளிட்ட இடங்களில் அன்னதான மண்டபங்கள் செயல்படுகின்றன. இனி அங்கெல்லாம் கேரள சத்யா விருந்து மட்டுமே வழங்கப்படும்.
கேரளாவின் பாரம்பரிய சத்யா விருந்து, ஓணம், திருவாதிரை, விஷு போன்ற பண்டிகைகளில் வீடுகளில் செய்யப்படும் சிறப்பு உணவு. இப்போது அந்த சுவை சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு இலவசமாக கிடைக்கப் போகிறது. “சுவாமியே சரணம் அய்யப்பா” என்று மலை ஏறும் பக்தர்களுக்கு இனி அன்னதானமும் “சுவையே சரணம் அய்யப்பா” ஆக மாறப்போகிறது!
இதையும் படிங்க: சபரிமலையில் இனி இதற்கெல்லாம் தடை... பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு...!