தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக திமுகவின் வலிமையான கோட்டையாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு அவரை சுமார் 8,000 முதல் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்தத் தோல்வி திமுகவினர் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில், நடிகர் சத்யராஜ் கொளத்தூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் பேசியது பெரும் கவனத்தைப் பெற்றது. கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்யராஜ், ஸ்டாலினின் தோல்வியை நினைத்து பேச பேச குரல் தழுதழுத்து, மேடையிலேயே கண்ணீர் விட்டார். “கொளத்தூரில் இந்த நிகழ்ச்சி நடப்பதால் இதைக் கேட்கிறேன்.

நீங்கள் செய்தது நியாயமா? கொளத்தூரில் தலைவர் வென்றிருக்க வேண்டும். அவர் தோற்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்று தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “அண்ணா, கலைஞருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் ஒரு வலிமையான தலைவர். இப்படிப்பட்ட ஒரு தலைவரை தோற்கடித்துவிட்டீர்கள். இனி பட்டுத் திருந்துங்கள். பட்டு அனுபவியுங்கள். அப்போதுதான் புத்தி வரும்,” என்று கலங்கிய குரலில் கூறினார்.
இதையும் படிங்க: ”தைரியம் இருந்தா இதை நிரூபிச்சிக்காட்டுங்க...” - உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா...!
ஸ்டாலின் தமிழ்நாட்டைப் பொற்காலமாக மாற்றிய திராவிட மாடல் ஆட்சியைச் செய்தவர் என்றும், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல முன்னேற்றங்களை கொண்டு வந்தவர் என்றும் புகழ்ந்தார். “இப்பேர்ப்பட்ட தலைவரை தோற்கடித்துவிட்டீர்கள்” என்று மீண்டும் மீண்டும் வலியுடன் சொன்ன அவர், தன்னை நக்கலான, கிண்டலான மனிதன் என்று சொல்லிக்கொண்டு, இந்தத் தோல்வியை மட்டும் சாதாரணமாக ஏற்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். சத்யராஜ் தனது பேச்சில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
______
இதையும் படிங்க: “புதிய ஆட்சி ஆறு மாசமாவது...” - தவெகவிற்கு ‘க்’ வைத்த திருமா... கூட்டணி குறித்து பகீர் அறிவிப்பு...!