மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகத் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் நீதிபதியின் மத அடையாளம் மற்றும் நடுநிலைமை குறித்துக் கடுமையான விமர்சனங்களும் அவதூறுகளும் முன்வைக்கப்பட்டன.
நீதிபதியின் தீர்ப்பு மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும், அவர் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்றும் திமுக மற்றும் இடது சாரி கட்சிகளைச் சேர்ந்த சிலர் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. எக்ஸ் (X), ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் நீதிபதியைத் தனிப்பட்ட முறையில் தாக்கித் தரக்குறைவானப் பதிவுகள் பகிரப்பட்டன.
இதையும் படிங்க: பைனான்சியர் மிரட்டல் வழக்கு! - தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீது அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு
வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நீதிபதிகளுக்கு எதிராக இத்தகைய அவதூறுகளைப் பரப்புபவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கலாம், ஆனால் நீதிபதிகளைச் சந்தைக்கடைச் சந்திப்புகளில் வைத்துத் தனிப்பட்ட முறையில் அவமதிப்பது நீதித்துறையின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் செயலாகும் என அவர் வாதிட்டார். அவதூறு பரப்பிய நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது FIR பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதிக்கு எதிராகத் தரக்குறைவாகப் பேசியவர்கள் மீது இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்கத் தமிழக அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகம் வெளியிட்ட கீழைக்காற்று பதிப்பகம் மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்துள்ளது. மேலும், அந்தப் புத்தகத்தைப் பறிமுதல் செய்யவும், அதன் விற்பனைக்குத் தடை விதிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "தனி நீதிபதி சொன்னது நடக்குமா?" கார்த்திகை தீப விவகாரத்தில் இன்று இறுதி தீர்ப்பு.. மதுரையில் பரபரப்பு!