தமிழக அரசியலில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் சமீபத்திய நேர்காணல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. என்டிடிவி தொலைக்காட்சியுடன் கேமரா இல்லாமல் நடந்த நேர்காணலில் விஜய், சினிமாவில் ஷாரூக் கான் தனது ரோல் மாடல் என்றும், அரசியலில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ரோல் மாடல் என்றும் கூறினார். திமுகவை முன்பு தீயசக்தி என்று விமர்சித்த விஜய், திடீரென கருணாநிதியை ரோல் மாடலாக குறிப்பிட்டது திமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த கருத்துக்கு கடுமையான கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை எந்தெந்த விஷயத்தில் விஜய் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டார் என்பதை தெளிவாக விளக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
ஜெயலலிதா ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர் என்றும், எம்ஜிஆர் தமிழ் பயிற்று மொழியை நீக்கி ஆங்கிலத்தை கொண்டு வந்தவர் என்றும் சீமான் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: வன்னியருக்கு ராமதாஸ்! முக்குலத்தோருக்கு ஓபிஎஸ்! பக்கா ஸ்கெட்ச் உடன் காத்திருக்கும் விஜய்!!

மேலும், "இவர்களை ரோல் மாடல் என்றால், கொள்கைத் தலைவர்கள் என்று விஜய் அறிவித்த 5 பேர் யார்? எந்தெந்த கொள்கைகளில் இருந்து அவர்களை எடுத்துக்கொண்டார் என்பதை விளக்க வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.
விக்கிரவாண்டி மாநாட்டில் பெரியார், அம்பேத்கர், வேலு நாச்சியார், காமராசர், அஞ்சலை அம்மாள் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாக அறிவித்த விஜய், மதுரை மாநாட்டில் அண்ணா மற்றும் எம்ஜிஆரையும் சேர்த்துக்கொண்டார். செங்கோட்டையன் இணைந்த பிறகு ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்தியது தவெகவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சீமான் விமர்சித்தார்.
ஜெயலலிதாவிடம் எந்தெந்த முடிவுகளில் உடன்பாடு என்று கூற வேண்டும் என்றும், கொள்கைத் தலைவர்கள் 5 பேரில் யாரும் ரோல் மாடல் இல்லை போலும் என்றும் சீமான் கிண்டலடித்தார். விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டில் குழப்பம் இருப்பதாகவும், தெளிவான கொள்கை அறிவிப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 2026 தேர்தல் வெற்றிக்கு விஜய் வியூகம்!! தவெக தனித்து நிற்க முடிவு! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!