கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட குற்றவாளி கொடுத்துள்ள வாக்குமூலம் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் பேரதிர்ச்சியையும், சொல்ல முடியாத வேதனையையும் அளிக்கிறது என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். ஒரு மலராக மலர வேண்டிய குழந்தையின் உயிரை இவ்வளவு கொடூரமாக பறித்துள்ள அந்த மிருகத்தனமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எந்தவித தாமதமுமின்றி அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!
புதிய அரசு பொறுப்பேற்ற பின், கடந்த இரண்டு வாரங்களாக நாம் செய்திகளில் காணும் பல்வேறு சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு குறித்த மக்களின் அச்சத்தையும் கவலையையும் அதிகரித்து இருப்பதாகவும் மக்களின் உயிரும், பாதுகாப்பும் அரசின் முதன்மை பொறுப்பு என்பதை இந்த புதிய அரசு உணர்ந்து, நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: #TNElectionResults2026: கோவை தெற்கில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி..!!